’நோ’ சொன்ன அமித் ஷா… லிங்காயத்து வேண்டாம்… கர்நாடக பாஜகவில் புது குழப்பம்!

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. மே 10ஆம் தேதி வாக்குப்பதிவு மற்றும் மே 13 வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றுக்காக ஒட்டுமொத்த நாடும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. ஆளும் பாஜக மீது ஊழல் புகார்கள், ஹிஜாப் சர்ச்சை, 40 சதவீத கமிஷன் விவகாரம் என பல்வேறு சர்ச்சைகள் நீடிக்கின்றன. இவற்றை சாதகமாக பயன்படுத்தி கொள்ள எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்த சூழலில் சீட் கிடைக்காத விரக்தியில் பலரும் பாஜகவில் இருந்து விலகி
காங்கிரஸ்
, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

லிங்காயத்து சர்ச்சை

அதில் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், லக்‌ஷ்மண் சவாதி ஆகியோர் முக்கியமானவர்கள். ஏனெனில் பெரும்பான்மை சமூகமாக விளங்கும் லிங்காயத்து பிரிவை சேர்ந்தவர்கள். இவர்கள் கட்சி மாறியதால் வாக்குகளை சரிவை சந்திக்கக் கூடும் எனச் சொல்லப்படுகிறது. இந்த சலசலப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க லிங்காயத்து முதல்வர் வேட்பாளரை தற்போதே அறிவித்து விடலாம் என்று மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு கர்நாடக பாஜகவின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அமித் ஷா கறார்

கடந்த வெள்ளி அன்று நடந்த கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது. அதில், லிங்காயத்து முதல்வர் வேட்பாளர் கோரிக்கையை அமித் ஷா மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி செய்தால் லிங்காயத்து அல்லாத சமூக வாக்குகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு விடும். எனவே தேர்தல் முடியும் வரை அமைதியாக இருங்கள். மாநில வளர்ச்சி திட்டங்கள், இரட்டை எஞ்சின் அரசு, இட ஒதுக்கீடு ஆகியவற்றை முன்னிறுத்தி பிரச்சாரத்தில் கவனம் செலுத்துங்கள்.

கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்போம்

மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பெரும்பான்மை பெற தேவையான 113 இடங்களை பெறுவதில் சிக்கல் வராது. லிங்காயத்து தலைவர்கள் வெளியேறியதால் 15 முதல் 20 சீட்கள் கிடைக்காது என்ற பிம்பம் பொய்யானது. நிச்சயம் நமக்கு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பின்னர் 20 இடங்களில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்யவுள்ளார். இவற்றில் கவனம் செலுத்தவும். குறிப்பாக ஷெட்டர், சவாதி, அயனூர் மஞ்சுநாத் ஆகியோர் துரோகம் செய்ததை தேர்தல் பிரச்சாரங்களில் சுட்டிக் காட்டுங்கள்.

பாஜக வியூகம்

கட்சியில் முக்கியமான பதவிகள் அளித்த போதும் வேறு கட்சியில் சேர்ந்து கொண்டதை பேசுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். லிங்காயத்து சமூக வாக்குகளை சிதறாமல் பெற வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. ஆனால் முக்கியத் தலைவர்கள் வெளியேறியது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதற்காக கட்சி தலைமை பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது. லிங்காயத்து மடங்களுக்கு சென்று ஆதரவு திரட்டுவது, ஆட்சியில் முக்கியத்துவம், பிரத்யேக வளர்ச்சி திட்டங்கள் என லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறது.

எடியூரப்பா நிலை தான்

ஆனால் இவை எதுவுமே எடுபடாது என்று காங்கிரஸ் அதிரடி காட்டி வருகிறது. சமீபத்தில் பாஜகவில் இருந்து வெளியேறி காங்கிரஸில் இணைந்த ஷெட்டர், பாஜக மீது லிங்காயத்துகள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அவர்கள் முதல்வர் வேட்பாளரை அறிவித்தால் கூட பெரிதாக எடுபடாது. ஏனெனில் எடியூரப்பாவை எப்படி நடத்தினார்கள் என்பது அனைவருக்குமே தெரியும் என விமர்சனம் செய்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.