ஹைதராபாத் : பழம்பெரும் நடிகர் சரத்பாபுக்கு திடீரென உடல்நிலை மோசமானதால் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆந்திராவைச் சேர்ந்த நடிகர் சரத்பாபு, 1973ஆம் ஆண்டு வெளியான ராம ராஜ்ஜியம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.
பட்டின பிரவேசம் என்கிற படத்தின் மூலம் சரத்பாபு தமிழில் அறிமுகம் ஆகி ரசிகர்களை கவர்ந்தார்.
நடிகர் சரத்பாபு : தமிழில் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்த சரத்பாபுக்கு அந்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தராததால், இரண்டாவது ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். விஜயகாந்த், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், சிரஞ்சீவி போன்ற முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள சரத்பாபு, ரஜினிகாந்துடன் முத்து, அண்ணாமலை, போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார். இந்த படங்கள் சூப்பர் ஹிட்டடித்தன.
திருமணம் : சரத்பாபு நடிகை ரமா பிரபாவை திருமணம் செய்துக் கொண்டு பின் அவரை விவாகரத்து செய்தார். இதையடுத்து, நடிகர் நம்பியாரின் மகளான சினேகா நம்பியாரை 1990ம் ஆண்டு திருமணம் செய்தார். பின் அவருடன் கருத்துவேறு பாடு ஏற்பட்டு 2011ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார்.

தொடர் சிகிச்சை : 71 வயதான சரத்பாபு இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழக அரசு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து முறையே சிறந்த நடிகர் மற்றும் சிறந்த துணை நடிகருக்கான நந்தி விருதுகளை வென்றார். ஒரு சில தொலைக்காட்சி தொடர்களில்நடித்து வந்த சரத்பாபு வயது மூப்பு காரணமாக சினிமாவை விட்டு விலகி ஹைதராபாத்தில் தனது வீட்டில் இருந்த நிலையில், திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மூன்று வாரங்களாக அவருக்கு தொடர்ந்து தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திடீரென மோசமான உடல்நிலை : இந்நிலையில் சரத்பாபுக்கு நேற்று திடீரென உடல்நிலை மோசமானதை அடுத்து ஹைதராபாத் ஏஐஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது, அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஐசியுவில் இருந்து பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் நன்றாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.