மும்பை: சிங் சாப் தி கிரேட் என்ற இந்தி திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஊர்வசி ராவ்டேலா.
தமிழில் லெஜெண்ட் சரவணன் ஜோடியாக தி லெஜண்ட் படத்தில் நடித்திருந்தார்.
தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் ஊர்வசி ராவ்டேலா மீது, நெட்டிசன் உமைர் சந்து தவறான தகவல்களை பதிவிட்டிருந்தார்.
இதனால், டென்ஷனான ஊர்வசி ராவ்டேலா உமைர் சந்துக்கு எதிராக அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஊர்வசி ராவ்டேலா அவதூறு வழக்கு
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ஊர்வசி ராவ்டேலா. 2013ம் ஆண்டு வெளியான சிங் சாப் தி கிரேட் என்ற இந்தி திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமான ஊர்வசி, தொடர்ந்து பாக் ஜானி, சனம் ரே, காபில், ஹேட் ஸ்டோரி 4, வெர்ஜின் பானுப்ரியா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் லெஜண்ட் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். மேலும் தெலுங்கில் ரிலீஸான ‘வால்டர் வீரய்யா’ படத்தில் சிரஞ்சீவியுடனும் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது ராம் பொத்தினேனி நடிக்கும் படத்திலும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில், தனது இன்ஸ்டாவில் ஊர்வசி ராவ்டேலா பதிவிட்டுள்ள ஒரு போஸ்ட் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் சுமார் 65 மில்லியன் பேர் ஊர்வசியை பாலோ செய்கிறார்கள். இந்நிலையில், தன்னைப் பற்றி மோசமாக ட்வீட் செய்திருந்த உமைர் சந்து குறித்து தான் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். திரை பிரபலங்கள் குறித்து அடிக்கடி சர்ச்சையான அவதூறான பதிவுகளை ட்வீட் செய்வதில் உமைர் சந்து கில்லாடி. இவரின் கட்டுக் கதைகள் அடிக்கடி டிவிட்டரில் சர்ச்சையை கிளப்பும்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஊர்வசி ராவ்டேலா குறித்தும் பொய்யான ஒரு தகவலை பதிவிட்டுள்ளார் உமைர் சந்து. அதாவது, ‘ஏஜென்ட்’ என்ற படத்தில் நடித்த போது, ஹீரோஅகில் அகினேனி ஊர்வசியிடம் தவறாக நடந்து கொண்டதாக பதிவிட்டுள்ளார். இருவரது புகைப்படங்களையும் பதிவிட்டு உமைர் சந்து ட்வீட் செய்திருந்தது டிவிட்டரில் வைரலானது.
இதனையடுத்து உமைர் சந்துவின் டிவிட்டர் போஸ்ட்டை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதனை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். மேலும், “உங்களது பொய்யான ட்வீட் குறித்து எனது வழக்கறிஞர் குழுவால் அவதூறு வழக்கு தொடர நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் தகவல் உண்மையானது அல்ல. நீங்கள் ஒரு முதிர்ச்சி அடையாத நபர், உங்களால் நானும் எனது குடும்பமும் மிக வேதனைக்கு உள்ளானோம் என்று தெரிவித்துள்ளார்.”
ஊர்வசி ராவ்டேலாவின் இந்த இன்ஸ்டா பதிவு பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உமைர் சந்து தொடர்ச்சியாக திரை பிரபலங்கள் குறித்து சர்ச்சையான கருத்துகளை பதிவிட்டு வருவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரலும் அதிகம் கேட்க தொடங்கியுள்ளன.