மும்பை : லெஜண்ட் பட நாயகி ஊர்வசி ரவுத்தேலாவை, வாரிசு நடிகர் தொந்தரவு செய்ததாக இணையத்தில் படுவேகமாக பரவி வரும் செய்தி குறித்து நடிகை அதிரடியாக பதில் அளித்துள்ளார்.
கிக், ரேஸ் குர்ரம், கிக் 2, துருவா, சைரா உள்ளிட்ட படங்களை இயக்கிய சுரேந்தர் ரெட்டி. அகில் அக்கினேனியை வைத்து ஏஜெண்ட் என்ற படத்தை இயக்கி உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வருடமாக நடைபெற்று வந்த நிலையில், இப்படம் ஏப்ரல் 28ந் தேதி வெளியாக உள்ளது.
ஏஜெண்ட் : நாகார்ஜுனாவின் இளைய மகனான அகில், ஏஜெண்ட் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்திற்காக தனது உடலமைப்பினை முழுமையாக மாற்றினார். சாக்ஷி வைத்யா, ஊர்வசி ரவுடேலா, மம்முட்டி, டென்ஸில் ஸ்மித் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து.
ஏப்ரல் 28ந் தேதி ரிலீஸ் : 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா சர்வதேச உளவாளியாக நடித்திருக்கிறார். இவரின் இந்த அவதாரத்தை திரையில் காண அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகி இப்படத்தை ராமபிரம்மம் சுங்கரா தயாரித்துள்ளார்.
துன்புறுத்தினார் : இந்நிலையில், பாடல் காட்சி ஒன்றில் அகில் அக்கினேனியுடன் இணைந்து ஊர்வசி டான்ஸ் ஆடிய போது, அகில் ஊர்வசிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தார் என்றும், அகில் ஒரு முதிர்ச்சியற்ற நடிகர் என்று ஊர்வசி கூறியதாகவும், அவருடன் பணியாற்றுவது சங்கடமாக இருப்பதாகவும் விமர்சகர் உமைர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த செய்தி இணையத்தில் பேசுபொருளாகி பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஊர்வசி ரவுடேலா இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

அவதூறு வழக்கு : அதில், அவதூறு செய்தி பரப்பிய பத்திரிக்கையாளர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. போலியான, அபத்தமான ட்வீட்கள், அநாகரீகமான பத்திரிகையாளர்களால் அதிருப்தி அடைகிறேன். நீங்கள் எனது அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அல்ல. நீங்கள் மிகவும் முதிர்ச்சியடையாத ஒரு பத்திரிகையாளர், அவர் என்னையும் எனது குடும்பத்தையும் மிகவும் சங்கடப்படுத்திவிட்டார் என தெரிவித்துள்ளார்.
கைவசம் உள்ள படம் : நடிகை ஊர்வசி ரவுடேலா, ஹாலிவுட்டில் நடிகர் மிச்செல் மோரோனுக்கு ஜோடியாக அறிமுகமாகிறார். மேலும் ராம் பொதினேனிக்கு ஜோடியாக ஒரு படத்திலும், ரன்தீப் ஹூடாவுடன் ஒரு படத்திலும் கமிட்டாகி உள்ளார். நடிகை ஊர்வசி ரவுடேலா, கடைசியாக மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் வால்டர் வீரய்யா பாஸ் பார்ட்டி என்ற பாடலில் குலுங்கி குத்தாட்டம் போட்டிருந்தார். இந்த பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.