டாக்கா: வங்கதேசத்தின் 22வது அதிபராக, ஆளும் ஆவாமி லீக் கட்சியின் வேட்பாளரான முஹமது ஷஹாபுதீன், 73, நேற்று அதிகாரப்பூர்வமாக பதவியேற்றுக் கொண்டார்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தின் அதிபராக, 2013ம் ஆண்டு முதல் இருந்த முகமது அப்துல் ஹமீதுவின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, அங்கு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
அதிபர் பதவிக்கான ஆளும் ஆவாமி லீக் கட்சியின் வேட்பாளராக முன்னாள் நீதிபதியும், சுதந்திர போராட்ட வீரருமான முகமது ஷஹாபுதீன் அறிவிக்கப்பட்டார்.
எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால் முஹமது ஷஹாபுதீன் தாக்கல் செய்த வேட்பு மனுவை அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது.
வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் முஹமது ஷஹாபுதீன் நாட்டின் புதிய அதிபராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து, வங்கதேசத்தின் 22வது அதிபராக முஹமது ஷஹாபுதீன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். இங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க தர்பார் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் ஷிரின் ஷர்மின் சவுத்ரி, அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பிரதமர் ஷேக் ஹசீனா, புதிய அதிபரின் குடும்ப உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மூத்த சிவில் மற்றும் ராணுவ அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement