அம்மாவின் தற்கொலை, பரிதவிக்கும் ஐந்து பெண் குழந்தைகள்; கரைசேர்க்க கரங்கள் சேருமா..?!

நாகலெட்சுமியின் ஐந்து பெண் குழந்தைகளுக்கும் இப்போது அம்மா இல்லை. அக்காக்கள் மூன்று பேருக்கும் அவ்வப்போது கண்கள் கசிகின்றன. தங்கைகள் இருவருக்கும், அம்மாவின் மரணத்தை புரிந்து கொள்ளும் வயதுகூட இல்லை. அம்மா எப்போது வருவார் எனத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு தற்கொலை, பறிபோகும் அந்த உயிரை விட, அவரை நம்பியிருக்கும் மற்ற உயிர்களுக்குத் தாங்கமுடியா துயரம்.

நாகலெட்சுமி தன் தவறான முடிவால், தன் குழந்தைகளுக்கு இப்போது அந்தத் துன்பத்தை விட்டுச் சென்றிருக்கிறார். யார் யாரோ செய்த பிழைகளுக்கு, தாயில்லா பிள்ளை என்ற தண்டனையை அனுபவிக்க ஆரம்பித்திருக்கும் அந்தக் குழந்தைகளைப் பார்க்கும்போது மனது வலிக்கிறது.

நாகலெட்சுமியின் ஐந்து பெண் குழந்தைகள்

என்ன நடந்தது நாகலெட்சுமிக்கு..?

“எனக்கு ஐந்து பெண் குழந்தைகள். அதனால் வேலை கேட்டது தவறா? ஊராட்சி கிளார்க் முத்து, வீரக்குமார், பாலமுருகன் என்னை அடிக்க, கை ஓங்கி அசிங்கப்படுத்தினார்கள். என் தற்கொலைக்குக் காரணம் இவர்கள்தான்…’’ என்று 31 வயதான நாகலட்சுமி கடிதம் எழுதி வைத்துவிட்டு, கடந்த ஏப்ரல் 12-ம் தேதி, ஓடும் பேருந்திலிருந்து குதித்து, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரை மாவட்டத்தில் ஏற்பத்திய சோகமும் அதிர்ச்சியும் இன்னும் நீங்கவில்லை.

நம்மிடம் பேசிய அரசு அலுவலர்கள், “மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே மையிட்டான்பட்டியைச் சேர்ந்தவர் நாகலெட்சுமி. கணவருக்கு நிரந்தரமில்லாத வேலை, குடும்பத்தின் வறுமை, உதவாத உறவுகள், பசியாற்ற வேண்டிய குழந்தைகள் எனச் சபிக்கப்பட்ட நிலையில் இருந்தார்.

இந்நிலையில் நாகலெட்சுமி, தான் 5 பெண் குழந்தைகளுடன் கஷ்டப்படுவதாகவும், வேலை வேண்டுமென்றும் கலெக்டரிடம் மனு கொடுத்ததை தொடர்ந்து, 100 நாள் வேலை பணித்தள பொறுப்பாளர் பணி வழங்கும்படி மையிட்டாம்பட்டி ஊராட்சிக்குப் பரிந்துரை செய்திருக்கிறார் கலெக்டர். ஆட்சியர் சொல்லிவிட்டார் என்பதால் வேண்டா வெறுப்பாக அப்பணியை நாகலெட்சுமிக்கு வழங்கியுள்ளார், ஊராட்சி செயலாளர் முத்து.

நாகலெட்சுமியின் ஐந்து பெண் குழந்தைகள்

ஒன்றரை வருடம் இந்தப் பணியை நல்லபடியாகப் பார்த்து வந்த நாகலட்சுமி, 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊராட்சி செயலாளர், உறுப்பினர்களான வீரக்குமார், பாலமுருகன் செய்து வரும் மோசடிகளை கண்டுபிடித்து கேள்வி கேட்டிருக்கிறார். அப்போதிருந்தே பிரச்னை ஆரம்பித்துள்ளது.

ஏப்ரல் மாதத்திலிருந்து அவருக்கு அந்தப் பணியை வழங்காமல் இழுத்தடித்துள்ளனர். இதை எதிர்த்துக் கேட்டதற்கு மிகவும் மோசமான முறையில் திட்டியுள்ளனர். தன்னை அசிங்கமாகப் பேசியும், அடிக்கவும் முயற்சித்த அவர்கள் மீது, நாகலட்சுமி கலெக்டர், போலீஸ் எனப் புகார் கொடுத்தார். ஆனால், விரைவான நடவடிக்கை இல்லை. மேலும் அவர்கள் அவரை மிரட்டியதால் கைவிடப்பட்ட அந்த நிலையில்தான், கலெக்டருக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு பேருந்திலிருந்து குதித்து தற்கொலை செய்திருக்கிறார்” என்றனர்.

நாகலெட்சுமியின் உறவினர்களிடம் பேசினோம்… “கணேசனுக்கும் நாகலட்சுமிக்கும் கல்யாணமாகி 13 வருசமாச்சு. சங்கீதா, விஜயதர்ஷினி, தேன்மொழி, சண்முகப்பிரியா, பாண்டிசிவானினு அடுத்தடுத்து அஞ்சு பொம்பளப் புள்ளைங்க பொறந்தாங்க. சம்பவம் நடந்த அன்னிக்கு, சின்னப்புள்ளைங்க ரெண்டையும் தூக்கிக்கிட்டு மதுரை போற பஸ்ஸுல கிளம்பிப் போனா.

சிவரக்கோட்டை நெருங்குறப்போ குழந்தைகளை பக்கத்துல இருந்த ஆளுங்ககிட்டே கொடுத்துட்டு, பஸ்லருந்து குதிச்சுட்டா. அலறி விழுந்தவ உடம்பெல்லாம் காயத்தோட ரோடெல்லாம் ரத்தமா கெடந்தா. குத்துயிரா கெடந்தவளை ஆம்புலன்ஸ்ல தூக்கிட்டு போயும் காப்பாத்த முடியல.

கடிதம்…

அஞ்சு பொம்பளைப் புள்ளைகளை பத்தி கொஞ்சமும் யோசிச்சு பாக்காம இப்படியொரு காரியத்தை பண்ணிப்புட்டாளே…” என்று ஆதங்கப்பட்டவர்கள், ‘“இந்தப் பிள்ளைங்களைப் பார்க்கும்போதெல்லாம் ஊரே துடிச்சுப் போகுது. காசு, பணமில்லைனாலும் அப்பனும் ஆத்தாளும் பாசத்துலயே வளர்த்துவிடுற பிள்ளைங்கதான் இங்க நிறைய. ஆனா, தாய்ப்பாசத்தையே தொலைச்சுட்டு நிக்கிற இந்தப் புள்ளைங்களை பார்க்கவே மனசு சகிக்க மாட்டேங்குது எங்களுக்கு.

எத்தனை பேர் பார்த்துக்கிட்டாலும், எத்தனை நாளைக்கு முடியும்? வேளைக்கு சாப்பிட்டுச்சுங்களானு வயித்த காயவிடாம சோறு போட அம்மா மாதிரி முடியுமா? சமயங்கள்ல தலை சீவாம, துணி மாத்தாமனு அதுங்க இருக்கிற கோலத்தைப் பார்க்கவே அய்யோனு அடிச்சுக்குது. அந்தப் புள்ளைங்களோட அப்பாவும் நொந்து, வெந்துபோய் கிடக்காரு. பெரிய புள்ளைக்கே 12 வயசுதான் ஆகுது. கடைசிப் புள்ளைக்கு மூணு வயசு. இதுக நல்லபடியா பசியாறி, பாதுகாப்பு கிடைச்சு, படிச்சு, பொழைச்சுக்கணும்… அதுக்கு வழி கெடைக்கணும்னு பார்க்கிற சனமெல்லாம் வேண்டுது’’ என்றார்.

நாகலெட்சுமியின் கணவர் கணேசன், “அஞ்சு பிள்ளைகளோட கஷ்டமான வாழ்க்கைனு அதுகள காப்பாத்தத்தான் வேலைக்காகப் போராடினா. ஆனா அந்த வேலையே அவ உசுர எடுத்து, இப்போ எம்புள்ளைங்களும் நானும் பரிதவிச்சுக் கிடக்கோம். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து உழைச்சப்போவே சமாளிக்க முடியல. இப்போ நான் மட்டும் தனியா, என் அஞ்சு கண்ணுங்களையும் எப்படி வளர்க்கப் போறேன்னு தெரியல. இவங்களை யார்கிட்ட விட்டுட்டு வெளியூர்ல வேலைக்குப் போயிட்டு வருவேன்னு தெரியல. எங்களையெல்லாம் கரை சேர்க்க ஏதாச்சும் வழி, விமோசனம் கிடைக்கணும்’’ என்றார் துயரம் உறைந்த கண்களுடன்.

மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர்

மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர், “ஐந்து பெண் குழந்தைகளுடன் கஷ்டப்பட்ட நாகலெட்சுமிக்கு 100 நாள் வேலை பணித்தள பொறுப்பாளர் பணி வழங்க நான் பரிந்துரை செய்தாலும், அந்த ஊராட்சி நிர்வாகிகள்தான் வேலை வழங்கினார்கள். அவர்களுக்குள் ஏன் பிரச்னை வந்தது என்று தெரியவில்லை. மீண்டும் பணி வழங்க மறுத்துள்ளனர்.

நாகலெட்சுமியின் தற்கொலைக்கு பின்னணியில் உள்ள அனைத்தையும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நாகலட்சுமியின் கணவர் மற்றும் குடும்பத்தினர் ஒத்துக்கொண்டால் அந்த ஐந்து குழந்தைகளையும் அரசே பொறுப்பெடுத்து வளர்க்கும். அது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஃபாலோ செய்து வருகிறார்கள்” என்றார்.

குழந்தைகள் சங்கீதா (வயது 12), விஜயதர்சினி (10), தேன்மொழி (8), சண்முகப்பிரியா (5), பாண்டிசிவானியை (3) இப்போது உறவினர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால், எத்தனை நாள்களுக்கு என்று தெரியவில்லை. ’அம்மா…’ என்று தேடிக்கொண்டே இருக்கும் குழந்தை பாண்டிசிவானியை அக்கா குழந்தைகள் மாற்றி, மாற்றி தூக்கிவைத்துக்கொண்டு சமாதானப்படுத்துகிறார்கள்.

அப்பாவும் அம்மாவும் உழன்று உழைத்தது இவர்களுக்காகத்தான். இப்போது அம்மாவும் இல்லை, அவர் சம்பாத்தியமும் இல்லை. உணவு, உடை என அடிப்படை தேவைகள், கல்வி என எதிர்காலம் விடையறியா கேள்விகளுடன் இவர்கள் முன் நீண்டு கிடக்கிறது.

மருகி நிற்கும் இந்தக் குழந்தைகளை ஆளாக்கிவிடும் பொறுப்பில், நல்ல மனங்கள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்!

நாகலெட்சுமி

இதுபோல உதவித் தேவைப்படுபவர்களுக்கு, வாசகர்களுடன் இணைந்து வாசன் அறக்கட்டளை தொடர்ந்து உதவி செய்து வருகிறது. அந்த வகையில் இந்த ஐந்து பெண் குழந்தைகளுக்கும் அடிப்படை தேவைகள் முதல் கல்வி வரை உதவ வாசன் அறக்கட்டளை முடிவெடுத்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எங்களின் இந்த முன்னெடுப்புடன் இணைந்து இந்தக் குழந்தைகளுக்கு உதவி அவர்களுக்குக் கைக்கொடுக்க விரும்புவர்கள் easypay.axisbank.co.in இந்த லிங்க்கை கிளிக் செய்து அதன் வழியே பண உதவி செய்யலாம்.

பண உதவி செய்யும் வாசகர்கள் அந்தத் தகவலை [email protected] என்ற மெயில் ஐ.டி.க்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இது, உங்களுக்கு 80-ஜி ரசீது வழங்க உதவியாக இருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.