கொழும்பு, : இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணங்களில் உள்ள
ஹிந்துக் கோவில்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும், அதன்
அடையாளத்தை மாற்றும் முயற்சியும் நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். கடந்த, ௨௦௦௯ல் இலங்கை ராணுவத்தின் நடவடிக்கைகளால் விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது.
குற்றச்சாட்டு
இதன் பின், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இலங்கை வாழ் தமிழர்கள் மறுவாழ்வுக்கான திட்டங்கள் செயல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தப் பகுதிகளில் தற்போது புதிய வகையில் நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக, அங்கு வசிக்கும் தமிழர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து அவர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:
ஹிந்துக் கோவில்கள் மீதான தாக்குதல் கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ளது. சிங்களமயமாக்கும் வகையில், அந்தப் பகுதிகளில் அதிகளவில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
இதைத் தவிர, தொல்லியல் ஆய்வு என காரணம் கூறி, பல ஹிந்துக் கோவில்கள் மூடப்பட்டு, மக்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்படுகிறது.
இது குறித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த யாழ்ப்பாணம் எம்.பி.,யான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளதாவது:
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள்தொகையில், ஹிந்துக்களே அதிகம் உள்ளன. கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களுக்கு அடுத்து நான்காவது இடத்தில் தான் புத்த மதத்தினர் உள்ளனர்.
ஆனால், இந்த பகுதிகளில், ஹிந்துக் கோவில்கள் மீதான தாக்குதல் ஒரு பக்கம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், புத்த மத தலங்கள் அதிகரித்து உள்ளன. சில கோவில்களில் இருந்து சிலைகளை அப்புறப்படுத்தியுள்ளனர்.
அனுமதி மறுப்பு
இதைத் தவிர, தொல்லியல் துறை ஆய்வு நடத்துவதாகக் கூறி, சில ஹிந்துக் கோவில்களை மூடி வைத்துள்ளனர். பக்தர்கள் செல்வதற்கு அனுமதி மறுத்துள்ளனர்.
இது தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்தி, இலங்கை வாழ் தமிழர்கள், அமைதியுடன் வாழ்வதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பல்வேறு தமிழர் அமைப்புகளும், ஹிந்து அமைப்புகளும் இதே கருத்தை தெரிவித்துள்ளன. இந்த சம்பவங்கள், இலங்கை வாழ் ஹிந்துக்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மசோதாவுக்கு எதிர்ப்பு!
இலங்கையில், ௧௯௭௯ முதல் அமலில் உள்ள கடுமையான பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு மாற்றாக புதிதாக, பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான மசோதா சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இலங்கை வாழ் தமிழர்களை ஒடுக்கும் வகையில் இந்த மசோதா அமைந்துள்ளதாக, தமிழர் அமைப்பு கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நேற்று போராட்டங்கள் நடந்தன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்