சென்னை: Shah Rukh Khan (ஷாருக்கான்) ஷாருக்கான் நடிக்கும் டன்கி படத்தின் புதிய அப்டேட் வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
பாலிவுட் பாஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இந்தியா முழுவதும் அவருக்கென்று ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். பல வருடங்களாக நடித்துவரும் ஷாருக் இன்றும் ஹிந்தியில் இருக்கும் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி உலகத்தின் செல்வாக்கு மிகுந்த நபர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தும் அசத்தியது குறிப்பிடத்தக்கது.
பதான் படம்: இவர் சமீபத்தில் பதான் படத்தில் நடித்திருந்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின் ஷாருக்கான் நடித்த படம் பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கிய இந்தப் படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நான்கு ஆண்டுகளுக்கு பின்பு ஷாருக்கான் நடித்திருப்பதால் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கியது.
எதிர்ப்பு வந்தாலும் 1000 கோடி ரூபாய் வசூல்: படத்தின் சிங்கிள் பாடல் வெளியானபோது அதில் தீபிகா படுகோன் அணிந்திருந்த உடையை வைத்து ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பலரும் படத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். எதிர்ப்புகளுக்கு இடையில் படமானது கடந்த ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பல எதிர்ப்புகளை சந்தித்தாலும் பதான் படம் 1000 கோடி ரூபாயை வசூலித்து மாஸ் சாதனை படைத்தது.

ஜவான் படம்: இதற்கிடையே அவர் அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன் தாரா நடித்துவருகிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில்தான் ஷாருக்கானும், நயன் தாராவும் பங்கேற்ற பாடல் காட்சியை ஷூட் செய்து முடித்தார் அட்லீ. படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டன்கி படத்தில் ஷாருக்கான்: ஷாருக்கானுக்கு அவரது மகனை வைத்து சில சோதனைகள் வந்தன. அதனையெல்லாம் வெற்றிகரமாக உடைத்தெறிந்த அவருக்கு பதான் கொடுத்த வெற்றி பெரும் உற்சாகத்தை ஊட்டியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் டன்கி படத்தில் நடித்துவருகிறார் ஷாருக்கான். இப்படத்தில் டாப்ஸி உள்ளிட்டோரும் நடித்துவருகின்றனர்.

காஷ்மீரில் ஷூட்டிங்: இந்நிலையில் டன்கி படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெறவிருக்கிறது. இதனையொட்டி படக்குழுவினர் காஷ்மீரில் முகாமிட்டிருக்கின்றனர். ஷாருக்கான் காஷ்மீருக்கு வந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் விஜய்க்கு பிறகு ஷாருக்கானும் காஷ்மீரில் களமிறங்கிவிட்டார் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் லியோ படத்தின் ஷூட்டிங் இரண்டு மாதங்களாக காஷ்மீரில் நடந்தது குறிப்பிடத்தக்கது. ஷாருக்கும் நடிக்கும் டன்கி படமானது இந்த வருடம் டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. பதான் படம் போலவே இந்தப் படமும் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.