பிளஸ் 2 தேர்வு முடிவு மே 8-ல் வெளியாகிறது – தேர்வுத் துறை அறிவிப்பு

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று தமிழக தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்.3-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இத்தேர்வை சுமார் 8.30 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி மாநிலம் முழுவதும் 79 மையங்களில் ஏப்.10-ம் தேதி தொடங்கி 21-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகள் நடந்து வருகின்றன.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த சூழலில், ‘நீட் தகுதித் தேர்வு மே 7-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவது, மாணவர்களிடம் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, மாணவர்கள் நலன் கருதி, தேர்வு முடிவு வெளியீட்டை தள்ளிவைக்க வேண்டும்’ என்று பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதை ஏற்று, பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு தள்ளிவைக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று முன்தினம் அறிவித்தார்.

இந்நிலையில், தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா நேற்று வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ம்தேதி காலை 9.30 மணிக்கு சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலக வளாகத்தில் வெளியிடப்படும். இதை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிடுவார்.

www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். தங்களது பள்ளிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையம் (NIC), அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள், தனி தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவுசெய்த செல்போன் எண்ணுக்கு குறுந்தகவலாகவும் அனுப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.