சென்னை : நடிகர் சூர்யாவின் தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில், பாலிவுட்டில் நடிகை திஷா பதானி, மிருணால் தாக்கூர், யோகி பாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மிகப்பிரமாண்டமாக இரண்டு பாகங்களாக இப்படம் தயாராகி வருகிறது.
இப்படத்திற்கு கங்குவா என வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கங்குவா என்ற தலைப்பு வெளியானதுமே இது சோஷியல் மீடியாவில் பெரும் புயலை கிளப்பியது. பலரும் கங்குவா என்றால் என்ன என்று, அர்த்தம் தெரிந்து கொள்ள கூகுலில் வலைவீசி தேடினார்கள். ரஜினிகாந்த் நடித்த இந்தி படத்தின் தலைப்பு தான் என்றும் படத்தின் டைட்டில் குறித்து ஒரு பட்டிமன்றமோ நடத்தும் அளவுக்கு தகவல் இணையத்தில் பரவின.
இதையடுத்து, படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா, படத்தின் தலைப்பு குறித்து தெளிவாக விளக்கினார். அதில், கங்குவா என்பது கதாநாயகினின் பெயர் என்றும், கங்கு என்றால் ஃபயர் என்றும் கங்குவா என்றால் பவர் ஆப் ஃபயர் என்று அர்த்தம் என்றார். தமிழ் உள்பட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளதால் அனைத்து மொழிக்கும் பொருத்தமான ஒரு பெயரை தேர்வு செய்து வைத்துள்ளதாக கூறினார்.

இப்படம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கதைக்களம் கொண்ட படமாகும். இப்படம் வெறும் கற்பனை கதை இல்லை, வலிமையான வரலாற்று ஆதாரங்கள் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் மூலம் புதிய ஒரு உலகத்தையே நீங்கள் பார்ப்பீர்கள். அதிக அளவில் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற உள்ளதால், 3டியில் கண்டுகளிக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கங்குவா படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானல் நடைபெற்று வருகிறது. 25 நாட்கள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த படப்பிடிப்பில் ‘கங்குவா’ இரண்டாம் பாகத்திற்கான காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இன்னும் 75 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ள நிலையில் நவம்பர் மாதத்துடன் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது ஏப்ரல் மாதத்தில் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.