புதுடில்லி ‘இரு தரப்பு உறவு மேம்பட, எல்லையில் அமைதி திரும்புவதை உறுதி செய்ய வேண்டும். எல்லை பிரச்னை தொடர்பாக, முந்தைய ஒப்பந்தங்களின் அடிப்படையில் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும்’ என, அண்டை நாடான சீனாவின் ராணுவ அமைச்சரிடம், நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய, எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் ராணுவ அமைச்சர்கள் மாநாடு புதுடில்லியில் இன்று நடக்க உள்ளது.
எல்லை பிரச்னை
கடந்த ௨௦௨௦ல் கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றது. இதை நம் படைகள் தடுத்து நிறுத்தின. இதைத் தொடர்ந்து, எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளன.
பல சுற்று பேச்சுக்கு பின், சில இடங்களில் இருந்து படைகள் திரும்பப் பெறப்பட்டன. இருப்பினும் இன்னும் சில இடங்களில், இரு நாட்டு ராணுவமும் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டன.
இந்த சம்பவத்துக்குப் பின், சீன ராணுவ அமைச்சர் லீ ஷாங்க்பு முதல் முறையாக நம் நாட்டுக்கு வந்துள்ளார். புதுடில்லிக்கு நேற்று வந்த அவர், ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். அப்போது, இரு தரப்பினரும், எல்லை பிரச்னை உள்ளிட்டவை குறித்து விவாதித்தனர்.
இது தொடர்பாக, நம் ராணுவ அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுஉள்ளதாவது:
இந்தியா, சீனா ராணுவ அமைச்சர்கள் சந்திப்பு மிகவும் வெளிப்படையாக அமைந்தது. எல்லை பிரச்னை உள்ளிட்டவை குறித்து இரு அமைச்சர்களும் விவாதித்தனர்.
‘எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்னையால், இரு நாட்டுக்கும் இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. எல்லையில் அமைதி திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்’ என, ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.
வலியுறுத்தல்
எல்லை பிரச்னை தொடர்பாக, முந்தைய இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும் என, அவர் வலியுறுத்தினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இன்று நடக்கும் ராணுவ அமைச்சர்கள் கூட்டத்தில், பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்க உள்ளார்.
வரும் மே ௪ – ௫ம் தேதிகளில் நடக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில், சீனாவின் குன் காங்க், பாகிஸ்தானின் பிலாவல் புட்டோ நேரில் பங்கேற்க உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்