கடந்தாண்டு முதல்முறையாக மே மாதம் 24 ஆம் தேதி மேட்டூர் அணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்து வைத்தார். அதே போன்று இந்த வருடமும் மே மாதம் மேட்டூர் அணை திறக்கப்படும் என டெல்டா விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் நடப்பாண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரானது குறைந்துள்ளது. சில நாட்களாக அணைக்கு வினாடிக்கு 346 கன அடி நீர் வந்த நிலையில் நேற்று 334 கன அடியாக குறைந்தது. இந்த நிலையில் இன்று அணைக்கு வரும் நீரின் அளவு 346 கன அடியாக அதிகரித்துள்ளது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படும்.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பூதலூரில் ரூ.90 கோடி செலவில் திருவாரூர் திட்டத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் “கடைமடை வரை காவிரி நீர் சென்றடையும் வகையில் பாசன ஆறுகள் கால்வாய்கள் முழுமையாக தூர்வாரப்படும். மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்பொழுது 101.1 அடியாக உள்ளது. நீர் இருப்பு 64 டிஎம் சியாக உள்ளதால் வரும் ஜூன் 12ஆம் தேதி முதல் குறுவை சாகுபடிக்காக நீர் திறக்கப்படும் என அறிவித்துள்ளார்.