பழநி: பழநி மலைக்கோயிலுக்கு செல்ல புதிய நவீன வின்ச் ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சோதனை ஓட்டத்திற்கு பின் பக்தர்களை ஏற்றிச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் 3 மின் இழுவை ரயில்கள் (வின்ச்) இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு வின்ச் ரயிலிலும் தலா 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு பெட்டியில் 20 பேர் வீதம் அமர்ந்து செல்ல முடியும். இந்த ரயில் பெட்டிகள் பயன்பாட்டுக்கு வந்து பல ஆண்டுகளாவதால் அதற்கு பதிலாக நவீன வசதிகளுடன் கூடிய ரயில் பெட்டிகளை வாங்குவதற்கு கோயில் நிர்வாகம் திட்டமிட்டது.
அதன்படி, கடந்த ஜனவரி மாதம் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பில் 2 நவீன வின்ச் ரயில் பெட்டிகள் வாங்கப்பட்டு, பழநிக்கு கொண்டு வரப்பட்டன. ஒவ்வொரு பெட்டியும் 3.6 டன் எடை கொண்டது.
இந்த பெட்டியில் 36 பேர் வரை அமரலாம். பெட்டி முழுவதும் குளிர்சாதன வசதி, டிவி, மின்விசிறி, சிசிடிவி கேமரா மற்றும் ஒலிப்பெருக்கி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் பொருத்துவதற்காக, கடந்த வாரம் 3-வது வின்ச் ரயில் நடைமேடைகளை சீரமைக்கும் பணி நடந்தது.
இதையடுத்து, நேற்று பழைய வின்ச் ரயில் பெட்டிகளை அகற்றி விட்டு, ராட்சத கிரேன் உதவியுடன் 2 புதிய நவீன வின்ச் ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் பொருத்தும் பணி நடைபெற்றது. ஒரு பெட்டி பொருத்தப்பட்ட நிலையில் நேற்று ஒரு பெட்டி பொருத்தப்பட உள்ளது. கோயில் துணை ஆணையர் பிரகாஷ், செயற்பொறியாளர் நாச்சிமுத்து மேற்பார்வையிட்டனர். சோதனை ஓட்டத்திற்கு பின், விரைவில் பக்தர்களை ஏற்றிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.