பாங்காக் :தாய்லாந்தில், கடந்த இரண்டரை ஆண்டுகளில், நண்பர்கள் 12 பேரை, ‘சயனைடு’ கொடுத்து கொன்ற கர்ப்பிணியிடம், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் பாங்காக் நகரத்தைச் சேர்ந்தவர் சிரிபார்ன் கான்வாங்.
சுற்றுலா
இவர் கடந்த 14ம் தேதியன்று தன் தோழி சாராரத் ரங்சிவதாபார்ன், 32, என்பவருடன் ரட்சாபுரி மாகாணத்திற்கு சுற்றுலா சென்றார். புத்த வழிபாடு நடத்துவதற்காக அங்குள்ள ஆற்றங்கரைக்கு இருவரும் சென்றனர்.
அப்போது, சிரிபார்ன் கான்வாங் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது மொபைல் போன், பை மற்றும் பணம் காணாமல் போயின.
உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடலில் சயனைடு கலந்திருப்பதும், அதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு அந்த பெண் உயிரிழந்ததும் தெரிய வந்தது.
சந்தேகம்
இந்த மரணத்தில், சிரிபார்ன் உடன் வந்த அவரது தோழி சாராரத் ரங்சிவதாபார்ன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
மேலும், கடந்த காலங்களில் இதே போல நடந்த மேலும் பல கொலைகள் குறித்து, போலீசார் விசாரணையை திருப்பினர்.
சாராரத்திடம் நடத்திய விசாரணையில், தன் முன்னாள் காதலன் உட்பட 12 பேரை சயனைடு கொடுத்து அவர் கொலை செய்தது தெரிய வந்தது.
இந்த கொலைகளை 2020 டிச., முதல், 2023 ஏப்., வரை அவர் செய்ததாக கூறப்படுகிறது.
கொலையானவர்கள் 33 முதல் 44 வயதை சேர்ந்தவர்கள் என்றும், பணம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை திருடுவதற்காக இந்த கொலைகள் நடந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
உயர் போலீஸ் அதிகாரியின் முன்னாள் மனைவியான குற்றவாளி சாராரத் தற்போது கர்ப்பமாக உள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்