விழுப்புரம்: ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின்கீழ் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறந்த சமூக சேவை மற்றும் அரசுப் பணிகளை ஆற்றிய 14 நபர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று முந்தினம் (26.4.2023) விழுப்புரத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், தொழில் மற்றும் வணிக சங்கப் பிரதிநிதிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், மீனவப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர். விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக நேற்று (27.4.2023) முதலமைச்சர் ஸ்டாலின், விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் சிறந்த சமூக சேவை மற்றும் அரசுப் பணிகளை ஆற்றிய 14 நபர்களை பாராட்டி அவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
1. இயற்கை உரத்தின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்தி வரும் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரா.பாண்டியன்
2. ஏழை மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் இலவசமாக பாடங்களை நடத்தி வருவதோடு ஊரக திறனாய்வு தேர்வு போன்ற தேர்வுகளை எழுதி உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்களுக்கு இலவசமாக பாடங்களை கற்றுக் கொடுத்து வரும் மரக்காணம் அரசு மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியர் பெ.சிவக்குமார்.
3. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுகப்பிரசவங்களுக்கு உதவியதோடு சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வரும் ஏழை எளிய தாய்மார்களை கனிவுடனும் அக்கறையுடனும் கவனித்து வரும் விழுப்புரம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் ஹாதீஜா பீபி.
4. நோயாளிகளிடம் மிகவும் கணிவுடன் பேசி சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வரும் திண்டிவனம் அரசு மருத்துவமனை மயக்கமருந்து நிபுணர் மருத்துவர் பா.வளவன்.
5. வேளாண்மை அலுவலகத்திற்கு வரும் விவசாயிகளின் தேவைகளை கேட்டறிந்து சரியான முறையில் தகவல் அளித்து உதவி வரும் திண்டிவனம் வேளாண்மை அலுவலக உதவியாளர் ந.ஆறுமுகம்.
6. காவல்துறை பணியை சிறப்பாகவும், நேர்மையாகவும் ஆற்றி வருவதுடன், அவசர தொலைபேசி 100 மூலம் கிடைக்கப்பெறும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து வரும் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன்.

7. திருக்கோவிலூர் காவல் நிலைய ஆய்வாளர் பாபு
8. விருத்தாசலம் நகர காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன்
9. சமுதாய நோக்கத்தோடும் அர்ப்பணிப்பு உணர்வோடும் பணியாற்றி வரும் கள்ளக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலைய அலுவலர் து.நாகேஸ்வரன்.
10. தொண்டு நிறுவனத்தின் மூலம் கல்வி, சுற்றுச்சூழல், மருத்துவ முகாம்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, மகளிர் முன்னேற்றம் ஆகிய பணிகளை ஆற்றி வரும் கடலூர் மாவட்டம், புவனகிரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பி.வேளாங்கன்னி.
11. ஏழை மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி வகுப்பு நடத்துவதோடு நாடக மற்றும் நடன பயிற்சி வகுப்பு, களிமண் பொம்மைகள் செய்ய பயிற்சி, ஆடல் பாடலுடன் திருக்குறள் பயிற்சி வகுப்பு போன்ற பணிகளை ஆற்றி வரும் கடலூர் மாவட்டம், பெரியநெசவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஆர்.பத்மஸ்ரீ.
12. இரத்த தான முகாம். இலவச கண் சிகிச்சை முகாம்களை மருத்துவமனைகளுடன் ஒருங்கிணைந்து நடத்துவது, கண்கள் தானம், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவது, ஆதரவற்றவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய உதவுவது, அதிகமுறை இரத்த தானம் வழங்கியது போன்ற சமூக பணிக்காக சிதம்பரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராமச்சந்திரன்.
13. கைதிகளிடம் கண்டிப்புடன் இருப்பதுடன் நேர்மையாக பணியாற்றி வரும் கடலூர் மத்திய சிறை உதவி ஜெயிலர் ஆர்.மணிகண்டன்.
14. கொலை முயற்சி, வெடிபொருள் வழக்குகளில் எதிரிகளை கைது செய்வதில் திறமையாக செயல்பட்ட புதுநகர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. கோ. நடராஜன்.
ஆகிய 14 பேருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்வில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.