சென்னை : நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படம் நாளைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தின் முதல் பாகம் கொடுத்துள்ள சிறப்பான வரவேற்பை தொடர்ந்து இரண்டாவது பாகமும் சிறப்பான வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2 மாதங்களாக சிறப்பான பிரமோஷன்களை படக்குழுவினர் கொடுத்துள்ளனர். இந்திய அளவில் பிரமோஷனல் டூரிலும் படத்தின் நடிகர், நடிகைகள் ஈடுபட்டுள்ளனர்.
கண்கலங்கிய கார்த்தி : நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், ஜெயராம், பிரகாஷ் ராஜ், சரத்குமார் உள்ளிட்டவர்கள் நடிப்பில் மணிரத்னம் இயக்கியுள்ள படம் பொன்னியின் செல்வன் 2. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டில் வெளியாகி சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்த நிலையில், சில மாத இடைவெளியிலேயே இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தையும் படக்குழுவினர் நாளைய தினம் ரிலீஸ் செய்யவுள்ளனர்.
முதல் பாகத்தை போலவே இந்தப் படத்திற்கான பிரமோஷன்களையும் மிகவும் சிறப்பான வகையில் படக்குழுவினர் செய்திருந்தனர். அடுத்தடுத்த வீடியோக்கள், பேட்டிகள், பத்திரிகையாளர்கள் சந்திப்புகள் என ஒவ்வொருநாளும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் திருவிழாவாகவே இருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் ஆன்த்தத்தை சென்னையில் வெளியிட்ட படக்குழுவினர் தொடர்ந்து தங்களது பிரமோஷனல் டூரையும் துவங்கினர்.
தொடர்ந்து கோவை, டெல்லி, கொச்சி, பெங்களூரு, திருச்சி என அவர்களது பிரமோஷனல் டூர் நீண்டது. இதில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஷோபிதா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, மணிரத்னம், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானும் சில இடங்களில் படக்குழுவினருடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சென்ற இடங்களில் எல்லாம் படம் குறித்தும் தங்களது மற்ற பிராஜெக்ட்கள் குறித்து இவர்கள் பகிர்ந்துக் கொண்டு, பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு சுவாரஸ்யத்தை கூட்டினர்.

நேற்றைய தினம் திருச்சியிலும் மிகவும் சிறப்பான வகையில் பிரமோஷன்கள் நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மத்தியில் மணிரத்னம், சுகாஹினி மணிரத்னம், ஐஸ்வர்யா ராய், ஏஆர் ரஹ்மான் இவர்களுடன் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஷோபிதா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மிகவும் கலர்புல்லாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர், நடிகைகள் அனைவரும் சிறப்பாக உரையாடினர்.
நிகழ்ச்சியின்போது பேசிய கார்த்தி, ஒருகட்டத்தில் பேச முடியாமல் கண்கலங்கினார். பிரமோஷன்கள் நிறைவுற்றதையடுத்து அவரது கண்கள் கலங்கின. இதையடுத்து ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள், அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த இடமே மிகுந்த நெகிழ்ச்சிக்குள்ளானது. ரசிகர்களும் இதைப் பார்த்து நெகிழ்ச்சியடைந்தனர். கடந்த சில தினங்களாக சமூகவலைதளங்களில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்த இவர்களை ரசிகர்களும் மிகவும் அதிகமாக மிஸ் செய்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.