இமாலய சாதனையுடன் நியூசிலாந்தை அடித்து நொறுக்கிய கேப்டன்!


நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் 334 ஓட்டங்கள் குவிப்பு

கராச்சியின் தேசிய மைதானத்தில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஃபஹ்கர் ஜமான் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் தொடக்க வீரர் மசூட் உடன் கைகோர்த்த கேப்டன் பாபர் அசாம், நங்கூரம் போல் நின்று நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்தக் கூட்டணி 50 ஓட்டங்கள் சேர்த்தது.

மசூட் 44 ஓட்டங்களில் சோதி பந்துவீச்சில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய ரிஸ்வான் 24 ஓட்டங்களில் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய அக்ஹ சல்மான் அதிரடியில் மிரட்டினார். அணியின் ஸ்கோர் 245 ஆக உயர்ந்தபோது, அரைசதம் விளாசியிருந்த அக்ஹ சல்மான் 58 (46) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பாபர் அசாம் புதிய சாதனை

அதனைத் தொடர்ந்து பாபர் அசாம் தனது 18வது ஒருநாள் சதத்தினை பதிவு செய்தார். அத்துடன் ஒருநாள் போட்டிகளில் விரைவாக 5000 ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற இமாலய சாதனையையும் படைத்தார்.

பாபர் அசாம்/Babar Azam Image: Pakistan Cricket (Twitter)

முன்னதாக, தென் ஆப்பிரிக்க வீரர் ஹாசிம் ஆம்லா 101 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை புடைத்திருந்த நிலையில், பாபர் 97 இன்னிங்ஸ்களில் முறியடித்துள்ளார்.

பின்னர் அவர் 107 ஓட்டங்களில் அவுட் ஆன நிலையில், ஷாஹீன் அப்ரிடி 7 பந்துகளில் 23 ஓட்டங்களும், முகமது ஹாரிஸ் 8 பந்துகளில் 17 ஓட்டங்களும் விளாசினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 334 ஓட்டங்கள் குவித்தது. மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளும், லிஸ்டர் மற்றும் சோதி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

சுழற்பந்துவீச்சில் வீழ்ந்த நியூசிலாந்து

மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் வில் யங் 15 ஓட்டங்களிலும், ப்ளெண்டல் 23 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

அதன் பின்னர் வந்த மிட்செல் 34 ஓட்டங்களும், கேப்டன் லாதம் 60 ஓட்டங்களும் குவித்தனர். ஆனால், உஸாமா மிர் சுழற்பந்து வீச்சில் அடுத்தது விக்கெட்டுகள் சரிந்தன.

லாதம்/Latham Image: ICC (Twitter)

அதிரடி காட்டிய மார்க் சாப்மேன் 33 பந்துகளில் 46 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, மிர் ஓவரில் போல்டு ஆனார். அடுத்து களமிறங்கிய வீரர்களை முகமது வாசிம் மற்றும் மிர் இணை வெளியேற்றியது.

லாதம்/Latham Image: Pakistan Cricket (Twitter)

பாகிஸ்தான் மிரட்டல் வெற்றி

இதனால் நியூசிலாந்து அணி 43.4 ஓவரில் 232 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தானின் உஸாமா மிர் 43 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார், இது அவரது சிறந்த பந்துவீச்சாகும்.

இமாலய சாதனையுடன் நியூசிலாந்தை அடித்து நொறுக்கிய கேப்டன்! | Pak Beat Nz By 102 Runs In 4Th Odi Image: AFP/Getty Images

முகமது வாசிம் 3 விக்கெட்டுகளும், ஹாரிஸ் ரஃப் 2 விக்கெட்டுகளும், ஷாஹீன் அப்ரிடி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக பெற்ற 4வது வெற்றி இதுவாகும்.

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஆட்டநாயகன் விருது வென்றார். இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி 7ஆம் திகதி இதே மைதானத்தில் நடைபெற உள்ளது.    

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.