அவதூறு வீடியோக்களை களை எடுக்கும் சைபர் கிரைம் போலீஸ்: யூடியூப் நிர்வாகத்துக்கு கோரிக்கை!

சமூக வலைதளங்களின் யுகம் இது. ஒரு வீடியோவோ, ஆடியோவோ, புகைப்படமோ வெளியான சில நிமிடங்களில் கோடிக்கணக்கான மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் சமூக வலைதளங்களின் வளர்ச்சி மிகப் பெரியதாக உள்ளது.

மோசடி செய்த சைபர் குற்றவாளிகளிடம் இருந்து ரூ.90000 மீட்கப்பட்டுள்ளது

ஆனால் அவை நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறதா, அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பது வெளியிடப்படும் வீடியோவின் உண்மைத் தன்மையை பொறுத்தது. ஒரே நேரத்தில் பல கோடி மக்களை சென்றடையக் கூடியதாகவும், இதன் மூலம் வருமானம் ஈட்டக்கூடியதாகவும் இருப்பதால் சமூகவலைதளங்களில் வீடியோக்கள் குவிந்து வருகின்றன. அவற்றில் பல வீடியோக்கள் அவசரகதியில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அவதூறுகளை பரப்புவதாகவும் இருக்கிறது. ஆரோக்கியமான விஷயங்களை விட அவதூறு கருத்துக்கள் மிக வேகமாக பரவுகின்றன, பரப்பப்படுகின்றன.

இதன்மூலம் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் சூழலும் ஏற்படுகிறது. அண்மையில் வட இந்திய தொழிலாளர்கள் தொடர்பாக போலி வீடியோ ஒன்று வெளியாகி தமிழ்நாட்டிலும், வட இந்திய மாநிலங்களிலும் அசாதாரண சூழலை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் பத்திரமாக இருக்கின்றனர் என்பதை பிற மாநிலங்களுக்கு புரிய வைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதாக இருந்தது.

இந்நிலையில் அவதூறு வீடியோக்களை களை எடுக்கும் பணியில் தமிழ்நாடு காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவு இறங்கியுள்ளது.

இது தொடர்பாக தமிழக சைபர் க்ரைம் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக வலைதளங்களில், தமிழக ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலான போலி கணக்குகள், வன்முறையை தூண்டும் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டு தடை செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டில், இதுவரை 40 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வெளியிடப்பட்ட 386 வீடியோக்களை தடை செய்ய யூடியூப்-க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 221 சட்டவிரோத கடன் செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மேலும் 61 கடன் செயலிகளை நீக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.