லிமா-தென் அமெரிக்க நாடான பெருவின், ஹுவான் காயோ நகரில் பிரபலமான ஷூ கடை இயங்கி வருகிறது. சமீபத்தில், இந்தக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மூன்று திருடர்கள், அங்கிருந்த ஷூக்களை திருடினர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், திருடப்பட்ட ஷூக்கள் அனைத்தும் வலது கால்களுக்கு பொருந்தக் கூடியவை. இவை, இந்திய மதிப்பில் 10 லட்சம் ரூபாய். இது குறித்து ஷூ கடை உரிமையாளர் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
கடையில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் திருடர்களை தேடி வருகிறோம்.
எதற்காக, வலது கால்களுக்கு பொருந்தக் கூடிய ஷூக்களை திருடினர் என்பது தெரியவில்லை.
ஒருவேளை திருடுகிற அவசரத்தில் எதை எடுக்கிறோம் எனத் தெரியாமல் திருடி இருக்கலாம். ஒரு ஷூவை கூட அவர்களால் விற்பனை செய்ய முடியாது. விரைவில் திருடர்கள் சிக்குவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement