சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி தொடர் அடுத்தடுத்த எபிசோட்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்தத் தொடரில் வீட்டில் வழுக்கி விழுந்த ஜெனியை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கிறார் ராதிகா. ஆனால் பாட்டி ஈஸ்வரியின் ஏச்சுக்கு ஆளாகிறார்.
இதனிடையே அவரது இந்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் பாக்கியா, ஆனால் தான் அவரைப்பார்த்து பாவப்படுவதாக கூறுகிறார்.
ராதிகாவை பார்த்து பாவப்பட்ட பாக்கியா : விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக மாறியுள்ள பாக்கியலட்சுமி தொடர் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு தந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி டிஆர்பியிலும் விஜய் டிவியின் முதன்மையான இடத்தை பிடித்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். கோபி -பாக்கியா -ராதிகா என முதன்மையான மூன்று கேரக்டர்களை வைத்துக் கொண்டு இந்த சீரியல் அடுத்தடுத்து ரசிகர்களை கவரும்வகையில் எபிசோட்களை தந்து வருகிறது.
பாக்கியாவை விவாகரத்து செய்யும் கோபி, தொடர்ந்து ராதிகாவை கன்வின்ஸ் செய்து அவரை திருமணம் செய்துக் கொள்கிறார். ஆனால் அவர் நினைத்தபடி அவருடைய திருமண வாழ்க்கை அமையவில்லை. தினந்தோறும் ஏதாவது ஒரு பிரச்சினையை சந்தித்து வருகிறார். முதல் குடுமபத்தையும் விட்டுக் கொடுக்க முடியாமல், இரண்டாவது திருமணத்திலும் முறையாக பொருந்த முடியாமல் அவர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகிறார்.
இதனால் இரு குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், ஒரு இரவில் அவர் குடியுடன் வரும்நிலையில், முதல் குடும்பத்தினருடன் தங்கும் சூழல் ஏற்படுகிறது. இதையடுத்து அங்குவரும் ராதிகா, அங்கேயே தங்கும் முடிவை எடுக்கிறார். தொடர்ந்து ராதிகா, பாக்கியா, கோபி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் ஒரே வீட்டில் தங்கும் நிலை ஏற்படுகிறது. இதையடுத்து ராதிகாவை தொடர்ந்து ஈஸ்வரி திட்டிக் கொண்டே இருக்கிறார். தன்னுடைய மகனின் வாழ்க்கை கெட அவர்தான் காரணம் என்று கூறுகிறார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், ஜெனி வழுக்கி விழுகிறார். தொடர்ந்து அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்க்கிறார் ராதிகா. வீட்டில் மற்றவர்களுக்கும் தகவல் கொடுக்கிறார். அவர் நல்லது செய்த நிலையிலும் அவரை ஈஸ்வரி திட்டித் தீர்க்கிறார். இந்நிலையில், மறுநாள் அவரிடம் வரும் பாக்கியா, தன்னுடைய நன்றியை தெரிவிக்கிறார். அவ்வளவு எளிதில் யாரும் செய்ய முடியாத உதவியை அவர் செய்ததாக பாக்கியா கூறுகிறார்.
தொடர்ந்து தான் சாதாரண ஹவுஸ் வொய்ப்பாக இருந்த நிலையில், ராதிகாவை பார்க்கும் போதெல்லாம் அவ்வளவு பாசிட்டிவ்வாக இருந்ததாகவும் அசால்ட்டாக அனைத்தையும் சமாளிப்பீர்கள், அப்படி பார்த்த உங்களை இப்படி பார்ப்பதற்கு தனக்கு மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும் பாக்கியா கூறுகிறார். அவர் அனைத்தையும் இழந்து நிற்பதாக தோன்றுவதாகவும் பாக்கியா கூறுகிறார். இதை கேட்கும் ராதிகா, சுய பச்சாதாபத்தில் ஆழ்கிறார்.

கோபியை இரண்டாவதாக திருமணம் செய்த ராதிகா, பாக்கியாவுடன் சக்களத்தி சண்டை போட தயாராக இருந்தார். அவரின் கேன்டீன் கான்டிராக்டை கெடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால் அவற்றிலிருந்தெல்லாம் வெளியில் வந்து, தன்னுடைய வெற்றிப் பாதையை வகுத்துக் கொண்டு நடைபோட்டு வருகிறார் பாக்கியா. ஆனால் பாக்கியா கூறியபடி, தன்னுடைய கெத்திலிருந்து இறங்கி,சாதாரண பெண்ணாக மாறியுள்ளார் ராதிகா. இதை தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார் பாக்கியா. இதனால் இருவரும் மீண்டும் நண்பர்களாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.