கர்நாடக சட்டமன்ற தேர்தல் 2023: சண்டை, விதிமீறல், அடித்து நொறுக்கல்… எதிர்பாராத 4 சம்பவங்கள்!

கர்நாடக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மணி நேரங்களில் முடிவுக்கு வரவுள்ளது. சரியாக மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றுவிடும். வாக்குப்பதிவு அமைதியாக தொடர்ந்த நிலையில் எதிர்பாராத சில சர்ச்சைகளும் வெடித்துள்ளன. இதுதொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

மாண்டியா மாவட்டத்தில் உள்ள நாராயணபுரா கிராமத்தில் வாக்குச்சாவடிக்கு வெளியே மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆதரவு பெற்ற ரைதா சங்க உறுப்பினர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில், அத்துமீறி வாக்கு சேகரித்த நிகழ்வால் மோதல் ஏற்பட்டிருப்பதாக கூறுகின்றனர்.

பெங்களூரு தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேகுர் வார்டில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக தொண்டர்கள் விதிகளை மீறி நோட்டீஸ் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி வேட்பாளர் அசோக் மிருத்யுஞ்சயா புகார் தெரிவித்துள்ளார். இந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும், பாஜக வேட்பாளர் எம்.கிருஷ்ணப்பா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

விஜயபுரா மாவட்டம் பசவன் பகேவாடி தாலுக்காவில் உள்ள மசபினாலா கிராமத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் ஓர் அறையில் வைக்கப்பட்டிருந்தன. இவை விஜயபுராவிற்கு கொண்டு செல்ல அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இதை வாக்களிக்க வந்திருந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வாக்குப்பதிவு இன்னும் முடியவில்லை.

அதற்குள் பாதியில் வாக்குப்பதிவை நிறுத்திவிட்டு இயந்திரங்களை எடுத்து செல்கிறார்களோ என்று சந்தேகம் அடைந்தனர். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை. ஒருவேளை தேர்தலில் முறைகேடுகள் நடக்கிறதோ? வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றுகிறார்களோ? என்று நினைத்து கோபமடைந்த பொதுமக்கள், அந்த இயந்திரங்களை அடித்து நொறுக்கினர்.

அதிகாரிகளும், அவர்களின் வாகனங்களும் தாக்கப்பட்டன. இதனால் அந்த கிராமமே பரபரப்பாக காணப்பட்டது. உடனே கூடுதல் போலீசார் விரைந்து வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர். கூடுதலாக வைக்கப்பட்டிருந்த இயந்திரங்கள் தான் எடுத்து செல்லப்பட்டன. இவை மாற்று ஏற்பாடாக கொண்டு வரப்பட்டவை என விளக்கம் அளித்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.

சில இளைஞர்கள் கைகளில் ஆயுதங்களுடன் சென்று பாப்பையா கார்டனில் உள்ள வாக்குச்சாவடியில் நின்று கொண்டிருந்த ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த நபர்களை தாக்கினர். இதில் சில பெண்கள் காயமடைந்தனர். இது காங்கிரஸ் – பாஜக இடையிலான மோதல் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.