தீராக் காதல் விமர்சனம்: முதிர்ச்சியான கதை, நம்மைக் காதலிக்க வைக்கிறதா, கவனம் ஈர்க்காமல் சோதிக்கிறதா?

வெவ்வேறு திருமண பாதையில் சென்றுவிட்ட முன்னாள் காதலர்கள் ஒருநாள் எதேச்சையாகச் சந்தித்துக் கொள்கிறார்கள். அச்சந்திப்பு இருவரின் வாழ்க்கையிலும் ஏற்படுத்திய தாக்கங்களைப் பேசுகிறது இந்த `தீராக் காதல்’.

மனைவி வந்தனா (ஷிவதா), மகள் ஆர்த்தியுடன் (வ்ரிதி விஷால்) மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் கௌதம் (ஜெய்). அலுவல் ரீதியாக சென்னையிலிருந்து மங்களூருவுக்கு ரயிலில் பயணம் செய்பவர், எதேச்சையாக தன் முன்னாள் காதலியான ஆரண்யாவை (ஐஸ்வர்யா ராஜேஷ்) சந்திக்கிறார். மங்களூருவிலேயே இரண்டு வாரங்கள் நட்பாகப் பழகுகிறார்கள். கொடுமைக்கார கணவரால் இருண்டு கிடக்கும் ஆரண்யாவின் வாழ்க்கைக்கு, முன்னாள் காதலனின் இருப்பு ஆறுதலையும், முறிந்த காதலின் நினைவுகளை அசைபோடுவது உற்சாகத்தையும் தருகிறது. இந்தப் புதிய நட்பு ஒருகட்டத்தில் எல்லை மீற, இருவரும் சுதாரித்துக் கொண்டு பிரிந்து, தங்கள் பழைய வாழ்க்கையில் ஐக்கியமாகிறார்கள். ஆனாலும், பின்வரும் நாள்களில் இருவரின் வாழ்க்கையிலும் ‘மங்களூரு நாள்கள்’ அசம்பாவிதங்களை நிகழ்த்துகின்றன. இறுதியில், அந்த முன்னாள் காதலர்கள் எடுக்கும் முடிவு என்ன, கௌதமின் மனைவி வந்தனா எடுக்கும் முடிவு என்ன என்பதை பதற்றமில்லாத திரைக்கதையில் நீட்டி முழக்கிச் சொல்லியிருக்கிறது ஜி.ஆர்.சுரேந்திர நாத் – இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் கூட்டணி.

தீராக் காதல் படத்தில்…

பொறுப்பான கணவனாகவும் செல்லமான அப்பாவாகவும் மட்டுமின்றி முன்னாள் காதலியைச் சந்திக்கும் போது, அவருடனான உரையாடலில் பழைய நினைவுகளை மீட்டெடுக்கும்போது ஒரு நடிகராகவும் ஜெய் கவனம் பெறுகிறார். பரிதவிப்பைச் சிறப்பாக வெளிப்படுத்துபவர், இரண்டாம் பாதியில் நிறைந்திருக்கும் பதற்றமான தருணங்களுக்கு ஏற்ற எமோஷனல் நடிப்புக்கும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், அவரின் திரை வாழ்க்கையில் முக்கியமான கதாபாத்திரமாக இது மாறியிருக்கும். ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்றிருக்கும் ஆரண்யா கதாபாத்திரம்தான், மொத்த படத்திற்கும் முதுகெலும்பாக உள்ளது. அந்தப் பொறுப்பிற்கு ஓரளவிற்கு நியாயம் செய்திருக்கிறார். வில்லனிஸ காட்சிகளில் மிரட்டும் அவர், சோகக் காட்சிகளில் தன் வழமையான சோக முக பாவனையை மட்டுமே மீண்டும் மீண்டும் காட்டியிருக்கிறார்.

கொடுமைக்கார கணவனாக அம்ஜத் கான் பயமுறுத்துகிறார். வந்தனா கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பைக் கச்சிதமாக வழங்கியிருக்கிறார் ஷிவதா. திரைக்கதையில் குறைந்த அளவே பங்காற்றியிருந்தாலும், நம் மனதில் நிற்கிறார். குழந்தை ஆர்த்தியாக வ்ரிதி விஷால் தன் சுட்டித்தனத்தால் கவர்கிறார். ஜெய்யின் நண்பராக வரும் அப்துல் லீக்கு வழக்கமான காமெடியன்-கம்-நண்பர் கதாபாத்திரம்தான் என்றாலும், சில ஒன்லைனர்களில் சிரிப்பிற்கு உத்தரவாதம் தருகிறார்.

மிகக் குறைந்த அளவிலான கதாபாத்திரங்களைக் கொண்டே திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால், ஆரம்பத்தில் விலகல் இன்றி தெளிவாகவும், நிதானமாகவும் திரைப்படம் செல்கிறது. ஆனால், வெவ்வேறு திருமண உறவில் இருக்கும் முன்னாள் காதலர்கள், ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக மாறிக்கொள்ளக் காரணமாக வைக்கப்பட்ட காட்சிகளில் நம்பத்தன்மையில்லை. முக்கியமாக, கௌதம் தன் மனைவியை நடு இரவில் போனில் அழைத்துப் பேச வேண்டும் என்கிறார். அது முடியாது என அவர் மனைவி நியாயமான காரணத்தைக் கூறியும் அதை ஏற்காமல், அந்தப் பதில் மீது ஏமாற்றம் கொள்கிறார். இதனால், அவர் மனம் முன்னாள் காதலியுடனான உரையாடலைக் கோருகிறது. இவ்வாறான காட்சிகளில் கௌதம் மற்றும் ஆரண்யா கதாபாத்திரங்களின் ‘நேர்மையையும் நியாயத்தையும்’ உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை.

தீராக் காதல் படத்தில்…

படம் தொடங்கிய சில காட்சிகளிலேயே ஒவ்வொரு கதாபாத்திரங்களின் தன்மைகளும் சொல்லப்பட்டுவிட்டன என்றாலும், மீண்டும் மீண்டும் அதை விளக்கும்படியான காட்சிகள் அயற்சியைத் தருகின்றன. முக்கியமாக, ஆரண்யாவின் கணவர் கதாபாத்திரத்தின் மோசமான குணத்தைக் காட்டுவதற்காக, ஆரண்யா உடல்ரீதியாகக் கொடூரமாகத் தாக்கப்படுவதைக் காட்சிப்படுத்திய விதம் பதைபதைக்க வைக்கிறது. பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைக் காட்சிப்படுத்தும்போது சமூக அக்கறையும் அவசியமானது என்பதை இயக்குநர் புரிந்துகொள்ள வேண்டும்.

தனக்கு நேரும் பிரச்னைகளையும், முன்னாள் காதலால் ஏற்படும் அசௌகரியங்களையும் முதிர்ச்சியாகக் கையாளும் கதாபாத்திரமாக முதற்பாதியில் காட்டப்படும் ஆரண்யா கதாபாத்திரம் இரண்டாம் பாதியில், அதற்கு நேரெதிராக செயல்படுகிறது. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் இருக்கும் தன் முன்னாள் காதலருக்குத் தொல்லை கொடுப்பது, அவரையே பின்தொடர்வது போன்றவற்றுக்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. மேலும், ‘எனக்கு புடிச்ச வாழ்க்கை கௌதம் மூலமாதான் அமையும். அத நான் விரும்புறது தப்பில்லை’ என வந்தனா பேசுவதும் குழப்ப அரசியலே. முற்பாதியில் பாதிக்கப்பட்டவராக வந்து நம் பரிதாபத்தைச் சம்பாதிப்பவர், பிற்பாதியில் வில்லனாக மாறி அடம் பிடிப்பது அக்கதாபாத்திரத்தின் மீது நம்மை ஒன்றவிடாமல் செய்துவிடுகிறது.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் நீலமேகத்தின் கேமரா மங்களூருவின் ஈரப்பதத்தையும், அங்கு முன்னாள் காதலர்களிடையே மீண்டும் துளிர்க்கும் பசுமையையும் அழகாகத் திரையில் கடத்தியிருக்கிறது. படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி.கே இரண்டாம் பாதியைக் கூடுதல் கண்டிப்புடன் தொகுத்திருக்கலாம். சித்து குமாரின் இசையில் இரண்டு பாடல்கள் ஈர்க்கவில்லை என்பதோடு கதையோட்டத்துக்கான வேகத்தடையாகவும் மாறியிருக்கின்றன. ஒரு சில எமோஷனல் காட்சிகளில் மட்டும் உணர்வுகளைக் கூட்டியிருக்கிறது.

தீராக் காதல் படத்தில்…

முன்னாள் காதலர்கள் சந்தித்துக்கொள்வதால் ஏற்படும் விபரீதங்கள் என்ற ஒன்லைன் எவர் கிரீன்தான். ஆனால், அதைச் சமகால ட்ரீட்மென்டிலாவது சொல்லியிருக்கலாம். மொத்த கதாபாத்திர வடிவமைப்பும், அவை ஒன்றுக்கொன்று மோதிக்கொள்வதும் 90களின் பட ஆக்கத்தையே நினைவூட்டுகின்றன. வசனங்களில் மணக்கும் ‘பண்டைய’ காதல் சொற்றொடர்களும் ‘உச்சு’ கொட்ட வைக்கின்றன.

மாடர்ன் லவ் காலத்தில் கொஞ்சம் அப்டேட்டான காட்சிகள் மற்றும் வசனங்களுடன் இந்த முதிர்ச்சியான கதையை அணுகியிருந்தால் நமக்கும் இந்தப் படத்தின் மீது ‘தீராக் காதல்’ ஏற்பட்டிருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.