இன்றிரவு என் கண்களுக்கு விருந்து படைத்தார் சாய் சுதர்சன் – சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

அகமதாபாத்,

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் – சென்னை அணிகள் மோதி வருகின்றன. இந்த இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்றிரவு நடக்கவிருந்த நிலையில், அகமதாபாத்தில் திடீரென பெய்த கனமழை பெய்ததால் ஆட்டம் இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று போட்டி 7.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி துவக்கத்தில் பந்து வீச்சில் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பீல்டிங்கில் சொதப்பியது. இதனால், சுப்மான் கில்-க்கு இரண்டாவது ஓவரிலேயே கேட்சை தீபக் சாஹர் தவற விட்டார். அதன்பிறகு சிக்சரும் பவுண்டரிகளுமாக கில் பறக்க விட்டு அசத்தினார்.

இந்த சூழலில் தோனி தனது வழக்கமான மின்னல் வேக ஸ்டம்பிங்கால் சுப்மன் கில்லின் அதிரடிக்கு தடை போட்டார். இதன்படி 20 பந்துகளில் 39 ரன்கள் அடித்து இருந்த கில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக விருத்திமான் சஹாவுடன் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் சஹா ஒரு பக்கம் அதிரடி காட்ட மறுபக்கம் சாய் சுதர்சன் களத்தில் ருத்ர தாண்டவம் ஆடினார். தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாச குஜராத் அணியின் ரன் வேகம் குறையாமல் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

சென்னை பந்து வீச்சை சிதறடித்த சாய் சுதர்ஷன் 47 பந்துகளில் 96 ரன்கள் குவித்து அவுட் ஆனார். சாய் சுதர்ஷன் 6 சிக்சர்கள், 8 பவுண்டரிகளை விளாசினார். இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சாய் சுதர்சனின் அதிரடி ஆட்டத்தை இந்திய முன்னாள் நட்சத்திர வீரரும், லெஜண்ட்டுமான சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “இன்றிரவு என் கண்களுக்கு விருந்து படைத்தார் சாய் சுதர்சன்.. நன்றாக விளையாடினாய் சாய்” என்று டெண்டுல்கர் பதிவிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.