சென்னையில் குடிநீர் தடுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: “குடி தண்ணீரைப் பொறுத்தவரை, பாதுகாப்பான முறையில்தான் உள்ளது. மழைக் காலம் வரும் வரை, சென்னைக்கு போதுமான அளவுக்கு தேவையான தண்ணீர் உள்ளது. எனவே, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை” என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் கீழ், குடிநீர் வாரிய பயிற்சி மையத்தில், கழிவுநீர் நீர் சேகரிப்பு தொட்டியிலிருந்து கழிவுநீரை இயந்திரங்களை கொண்டு பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்வது குறித்து கழிவுநீர் லாரிகளை இயக்குபவர்களுக்கான பயிற்சியினை அமைச்சர் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

மேலும் கழிவுநீரை இயந்திரங்களை கொண்டு பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்வது குறித்த பயிற்சி கையேட்டினையும் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது: “ஜல்ஜீவன் திட்டத்தை திறம்பட செயல்படுத்தியதற்காக, இந்திய அளவில் முதல் மாநிலம் என்ற விருதினை மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து சென்னைக்கு குழாய் பதிக்கும் பணி ஒன்று நடைபெற்று வருகிறது. இந்தப்பணி நிறைவு பெற்றால், சென்னைக்கு 1200லிருந்து 1300 எம்எல்டி தண்ணீர் கொடுத்துவிடலாம்.

ஏற்கெனவே வடசென்னை பகுதியில் உள்ள குழாய்களை எல்லாம் மாற்றுவதாக கூறி, அந்தக் குழாய்கள் எல்லாம் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. குழாய்கள் பதித்து 50-60 வருடங்கள் ஆகிவிட்டதால், சில இடங்களில் பழுது ஏற்பட்டுள்ளது. பழுது எந்தெந்தப் பகுதிகளில் உள்ளதோ, அவையெல்லாம் மாற்றப்பட்டுத்தான் வருகிறது. அதை தொடர் பணியாகத்தான் செய்துகொண்டு வருகிறோம்.

சென்னையில் குடிதண்ணீரைப் பொருத்தவரை, பாதுகாப்பான முறையில்தான் உள்ளது. மழைகாலம் வரும்வரை போதுமான அளவுக்கு சென்னைக்கு தேவையான தண்ணீர் உள்ளது. எனவே, சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.