மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பணம் செலுத்தி அனுமதிப்பத்திரம் பெறாதவர்கள் இருப்பின், அது தொடர்பாக துரித விசாரணை ஒன்றை நடத்தி, அவர்களுக்கு நியாயமான தீர்வொன்றை வழங்குமாறு மோட்டார் போக்குவரத்து ஆணையாளருக்கு அறிவிக்கப்படும் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்தத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்கி ஈ-மோட்டார் (E-motor)திட்டம் இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலையிட்டுள்ளதுடன், உரிய தரப்பினருடன் கலந்துரையாடுவதற்கு பிரதமரின் செயலாளர் தலைமையில் விசேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு மோட்டார் கார் பதிவு, மோட்டார் வாகன அனுமதிகப்பத்திரம் பெறுதல், இலக்கத் தகடுகளைப் பெறுதல் போன்றவற்றுக்கு அதிக வினைத்திறனான சேவையை வழங்க முடியும்.
திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்குவதை விரும்பாத பலர் இருப்பதாகவும் அவர்களே இந்த திட்டத்தை சீர்குலைப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் உலகில் உள்ள புதிய தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் அரசு நிறுவனங்களில் செயல்படுவதன் மூலம் அரச சேவையில் உள்ள திறனை குறைத்துக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.