ஜெய்ப்பூர்: ராஜ்ஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான சச்சின் பைலட் அக்கட்சியில் இருந்து விலகுவது என முடிவு செய்துள்ளார். காங்கிரஸில் இருந்து விலகும் சச்சின் பைலட் ஜூன் 11-ந் தேதி தனிக் கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார் என்கின்றன தகவல்கள்.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 101 இடங்கள். 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 108 இடங்களிலும் பாஜக 71 இடங்களிலும் வென்றது. ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ்- பாஜக இடையேதான் நேரடி போட்டி இருந்து வருகிறது. ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார். இம்மாநிலத்தில் ஆம் ஆத்மி இம்முறை தீவிர கவனம் செலுத்த இருக்கிறது.
2018-ம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில் இருந்து இன்று வரை உட்கட்சி மோதல் ஓயவே இல்லை. முதல்வராக அசோக் கெலாட்டும் துணை முதல்வராக சச்சின் பைலட்டும் அறிவிக்கப்பட்ட போதும் உட்கட்சி பஞ்சாயத்து முடிவுக்கு வரவில்லை. அசோக் கெலாட், காங்கிரஸ் மேலிடத்தின் முழுமையான ஆதரவால் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களை ஓரம்கட்டினார். ஒருகட்டத்தில் கொந்தளித்து போன சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கெலாட்டுக்கு எதிராக பகிரங்கமாக போர்க்கொடி தூக்கினர். இப்படி ஒவ்வொரு முறையும் பைலட் கலகக் குரல் எழுப்பும் போதெல்லாம் டெல்லி மேலிடம் தலையிட்டு சமாதானப்படுத்திக் கொண்டே வந்தது. ஆனால் தங்களது கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்கிற ஆதங்கம் சச்சின் பைலட் கோஷ்டியிடம் இருந்து வந்தது.
இந்த நிலையில் ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் பெற்ற வெற்றியை ராஜஸ்தானில் பெற வேண்டும் என்பதற்காக அசோக் கெலாட், சச்சின் பைலட் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு காங்கிரஸ் மேலிடம் ஆலோசனைகள் நடத்தியது. இந்த ஆலோசனைகளின் முடிவில் இருவரும் இணைந்தே தேர்தலை சந்திப்பது என அறிவித்தனர்.
ஆனால் தற்போது காங்கிரஸில் இருந்து சச்சின் பைலட் முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையின் பேரில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சியை தொடங்க சச்சின் பைலட் திட்டமிட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது. வரும் ஜூன் 11-ந் தேதி சச்சின் பைலட்டின் தந்தை மூத்த காங்கிரஸ் தலைவரான ராஜேஷ் பைலட்டின் மறைவு தினம். அன்றைய தினம் தமது தனிக்கட்சி குறித்த அறிவிப்பை சச்சின் பைலட் வெளியிடக் கூடும் என்றும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
என்னதான் நடக்குமோ?