மும்பையில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இன்று அதிரடி சோதனை நடத்தி 15,000 போதைப்பொருள் மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர். மும்பையிலுள்ள மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங் இது தொடர்பாக இன்று அளித்த பேட்டியில், “சக்திவாய்ந்த செயற்கை மயக்க மருந்தான LSD (Lysergic Acid Diethylamide) எனப்படும் 15,000 போதை மருந்து மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக ஆறு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். வழக்கமாக 0.1 கிராம் அளவுதான் வர்த்தகரீதியாகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பிடிபட்டது ஆயிரம் மடங்கு அதிக சக்தி வாய்ந்தது ஆகும். இந்த அளவுக்கு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படுவது, கடந்த 20 ஆண்டுகளில் இதுவே முதன்முறையாகும்.

இந்தப் போதை மருந்து விற்பனை சட்டத்துறைக்குத் தெரியாமல் இருப்பதற்காக டார்க்நெட் மூலம் நடைபெற்றுவந்தது. முற்றிலும் இன்டர்நெட் மூலமே நடந்துவந்த இந்தத் தொழில் போலந்து, நெதர்லாந்து, அமெரிக்காவில் விரிவடைந்து காணப்படுகிறது. இந்தியாவில் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், டெல்லி போன்ற மாநிலங்களிலும் விரிவடைந்து காணப்படுகிறது. இந்த மருந்து பெரும்பாலும் போலந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கான பணம் கிரிப்டோகரன்சி மூலம் வழங்கப்படுகிறது. இந்தப் போதை மருந்துக்கு வாசனை, சுவை இருக்காது.
எனவே, அதை எளிதில் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம். இதை புத்தகங்களில் வைத்துக்கூட கடத்த முடியும். சமீபகாலமாக இந்த போதை மருந்து இளைஞர்களிடம் வேகமாகப் பரவிவருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட போதை மருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடையது.

போதைப்பொருள் மட்டுமல்லாது 2.5 கிலோ கஞ்சா, ரூ.4.65 லட்சம் ரொக்கப் பணம், வங்கிகளில் 20 லட்சம் டெபாசிட் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன” என்று தெரிவித்தார்.
ஞானேஷ்வர் இதற்கு முன்பு நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கை விசாரித்தவர் என்பது கவனிக்கத்தக்கது.