கீவ், உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள காக்ஹோவ்கா அணையின் ஒரு பகுதி குண்டு வைத்து தகர்க்கப்பட்டதாக, இரு நாடுகளும் பரஸ்பரம் புகார் கூறியுள்ளன. அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேறுவதால், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்தாண்டு பிப்ரவரியில் துவங்கிய இந்த போர், 16 மாதங்களாக நடந்து வருகிறது.
இந்நிலையில் உக்ரைனின் தெற்கே, டினிப்ரோ நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிரமாண்ட காக்ஹோவ்கா அணையின் ஒரு பகுதி குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளதாக ரஷ்யா மீது உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. உக்ரைன் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.
தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இந்த அணை அமைந்துள்ளது. இது தகர்க்கப்பட்டுள்ளதால், ஐரோப்பாவின் மிகப் பெரிய அணு மின்சக்தி உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி பாதிக்கப்படும் என்றும், கெர்சான் உள்ளிட்ட நகரங்கள் மற்றும் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் உக்ரைன் கூறியுள்ளது.
இந்த அணையில் இருந்து, 1,816 கோடி லிட்டர் நீர் வெளியேறலாம் என்றும், இதனால் அதிகளவில் உயிர் பலி ஏற்படும் என்றும் உக்ரைன் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளிலேயே மிகவும் பெரிய, ஜாபோரிஸ்ஜியா அணு மின் உற்பத்தி நிலையம், இந்த அணையின் நீரில் இருந்து தான் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
மேலும், அணுமின் உற்பத்தி நிலையத்தை குளிரூட்டுவதும் இந்த அணை நீரே. அந்த அணையில் இருந்து நீர் வெளியேறினால், அணுமின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்து, 2014ல் ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்ட, கிரீமியா உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
அணையில் இருந்து நீர் வெளியேறி வருவதால், அதையொட்டியுள்ள பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு, ரஷ்யாவும், உக்ரைனும் கூறியுள்ளன.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள காக்ஹோவ்கா அணையின் ஒரு பகுதி குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதனால், அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேறி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் வெளியேறுவதை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்