அளவுக்கு அதிகமாக மாசு அடைந்த தாமிரபரணி ஆற்று நீர் – அன்புமணி இராமதாஸ் விடுத்த எச்சரிக்கை!

பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டின் ஒரே வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆற்றுநீர் மிக மோசமாக மாசு அடைந்திருப்பதாக நியூஸ் 18 தமிழ்நாடு செய்தித் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. 

சர்வதேச தர குறியீட்டுடன் ஒப்பிடும்போது தாமிரபரணி ஆற்றுநீர் பல மடங்கு மாசடைந்து உள்ளதாகவும், தாமிரபரணி நீரில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் மடிந்து தீமை பயக்கும் பாக்டீரியாக்கள் அதிகளவில் இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அதிக அளவில் கால்சியம் கலந்திருப்பதால், தாமிரபரணி ஆற்றுநீர் குடிக்கும் தகுதியை இழந்துவிட்டதாக ஆய்வு தெரிவிக்கிறது. மிகச் சுவையான நீராக கருதப்பட்ட தாமிரபரணி ஆற்றுநீர் இந்த அளவுக்கு மாசு அடைந்திருப்பது வருத்தமும் கவலையும் அளிக்கிறது.

தாமிரபரணி ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் மூலிகைகளை கடந்து வருவதால், அதில் குளித்தாலே நோய் தீரும் என்பார்கள். ஆனால், இப்போது அந்த ஆற்று நீரை குடித்தாலும், குளித்தாலும் நோய் வரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தாமிரபரணி ஆற்றுநீர் குடிக்க முடியாத அளவுக்கு மாசு பட்டிருப்பதற்கு அந்த ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு கழிவுகள் கலக்கப்படுவதும், மணல் கொள்ளை நடப்பதும், பெப்சி, கோக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்றின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க அனுமதி அளிக்கப்பட்டதும் தான் காரணமாகும்.

தாமிரபரணி ஆறு மாசு அடைவதை தடுக்கும் நோக்குடன் கடந்த 2017ஆம் ஆண்டு ஜுலை 1, 2 ஆகிய தேதிகளில் தாமிரபரணி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் விழிப்புணர்வுப் பயணம் மேற்கொண்டேன். தாமிரபரணியைக் காப்போம் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட அந்தப் பயணத்தின் போது, தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலக்கப்படுவதையும், நிலத்தடி நீர் கொள்ளையடிக்கப்படுவதையும் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன். அதன் பின் 7 ஆண்டுகள் ஆகும் நிலையில், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவுதான் இந்த அவல நிலைக்குக் காரணம்.

தாமிரம் வரும் ஆறு என்று போற்றப்பட்ட தாமிரபரணி ஆற்றுநீர் நஞ்சாக மாறுவதை அனுமதிக்கக் கூடாது. தாமிரபரணி ஆற்றுநீரை தூய்மைப் படுத்துவதற்கான திட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் தாமிரபரணி ஆற்றில் 50 ஆண்டுகளுக்கு முன் எவ்வளவு தூய்மையான நீர் ஓடியதோ, அதேபோன்ற நீர் மீண்டும் ஓடுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று, அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.