பொகோட்டா: கொலம்பிய நாட்டில் அமேசான் காடுகளில் 4 குழந்தைகள் 40 நாட்கள் கழித்து மீட்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே 40 நாட்கள் அவர்கள் எப்படி உயிர் பிழைத்து இருந்தனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொலம்பியா நாட்டில் உலகப் புகழ் பெற்ற அமேசான் காடுகள் உள்ளன. கடந்த மே 1ஆம் தேதி அமேசான் காட்டின் மீது பயணித்த ஒரு குட்டி விமானம் எதிர்பார்க்காத வகையில் விபத்தில் சிக்கியது.
இந்த கொடூர விபத்தில் இருந்து 4 குழந்தைகள் மட்டும் உயிர் பிழைத்தனர். விமானி, அவர்களின் தாய் மற்றும் மற்றொரு நபர் இந்த விபத்தில் உயிரிழந்தனர். விமானம் திடீரென விபத்தில் சிக்கியதால் அதில் யாராவது பிழைத்துள்ளனரா என்பதைக் கண்டறியத் தேடுதல் வேட்டை நடத்தினர்.
4 குழந்தைகள்: இந்த 4 குழந்தைகளும் அங்குள்ள பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். இதனால் அவர்களுக்குக் காடு நன்கு பரிட்சயம் ஆகியிருந்தது. இதனால் சுமார் 40 நாட்கள் அமேசான் காட்டில் கையில் கிடைத்த செடி, விதைகளைச் சாப்பிட்டு உயிர் பிழைத்துள்ளனர். இந்த 4 குழந்தைகளும் 40 நாட்கள் எப்படி உயிர் பிழைத்து இருந்தனர் என்பது குறித்துப் பார்க்கலாம்.
விமான விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன், கொலம்பியா ராணுவத்தினர் அவர்களைத் தேடும் பணிகளைத் தொடங்கினர். அந்த 4 குழந்தைகளும் காடுகளைக் குறித்துச் சொல்லிக் கொடுத்தே வளர்க்கப்பட்டனர். இதனால் காடுகள் குறித்து நான்கு குழந்தைகளுக்கும் பல விஷயங்கள் தெரிந்து இருந்தன. இதுவே அந்த குழந்தைகள் யாருமே இல்லாத போதிலும் தனியாகத் தப்பிப் பிழைக்க உதவியாக இருந்துள்ளது.
உயிர் பிழைத்தது எப்படி: தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு சுமார் 40 நாட்கள் கழித்து குழந்தைகளை அந்நாட்டு ராணுவம் மீட்டது. இந்த குழந்தைகளை “காட்டின் குழந்தைகள்” என்றே அங்குள்ளவர்கள் அழைக்கிறார்கள். அவர்கள் விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்த யூக்கா என்ற ஒரு வகை மாவைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்துள்ளனர்.
மேலும், அங்கிருந்த உண்ணக் கூடிய பழங்கள், வேர்கள், தாவரங்களை அடையாளம் கண்டு எடுத்துச் சாப்பிட்டுள்ளனர். சிறு வயதில் இருந்தே அந்த குழந்தைகளுக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளது. இதனால் காட்டில் தனியாக இருந்த போது, அவர்கள் எளிதாக இந்த பழங்களை அடையாளம் கண்டு சாப்பிட்டுள்ளனர்.
தேடுதல் வேட்டை: கொலம்பியா ராணுவத்துடன் இணைந்து பல உள்ளூர் பழங்குடியினரும் இந்த தேடல் நடவடிக்கையில் இறங்கினர். இந்த குழந்தைகளைக் காட்டில் இருந்த இயற்கை என்ற சக்தியே காப்பாற்றியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பழங்குடியின அமைப்பைச் சேர்ந்த சிலர் கூறுகையில், “எங்களுக்கு இயற்கையுடன் ஒரு வித கனெக்ஷன் இருக்கிறது. இதுதான் குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளது. ஒட்டுமொத்த உலகத்திற்கும் இதுபோன்ற ஒரு கனெக்ஷன் இப்போது தேவைப்படுகிறது” என்றார்.
கொலம்பியாவின் உள்ள சில பூர்வக்குடி குழுக்கள் தங்கள் நிலங்களைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தியும் போராடி வருகிறார்கள். இந்த பழங்குடி சமூகங்களுக்கும் அந்நாட்டின் ராணுவத்தினருக்கும் நல்ல ஒரு உறவு இருந்ததே இல்லை. ஆனால், இந்த குழந்தைகளை மீட்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இரு தரப்பும் ஒன்றாக இணைந்துள்ளது. ராணுவத்தினர் தேடுதல் வேட்டையைத் திட்டமிட, அங்குள்ள காட்டுச் சூழலை விளக்கி விஷம் கொண்ட விலங்குகளிடம் இருந்து தப்பிக்கப் பழங்குடியினர் உதவியுள்ளனர்.