ஒரு மூதாட்டியின் தண்டட்டி தனக்குள் ஒளித்து வைத்திருக்கும் கதையையும், அந்தத் தண்டட்டி திருடப்படும்போது ஒரு கிராமத்தில் நடக்கும் களேபரங்களையும் பேசுகிறது இந்த `தண்டட்டி’.
தேனி மாவட்டம் தேவாரத்திற்கு அருகில் உள்ள கிராமம் கிடாரிபட்டி. எந்தப் பிரச்னைக்கும் காவல் நிலைய படியேறாமல், ஊருக்குள்ளேயே பஞ்சாயத்து பண்ணிக்கொள்வதுதான் அந்த ஊரின் வழக்கம். மீறி வரும் காவலர்களுக்கு அடி உதைதான் அன்பளிப்பு. இந்தக் கிராமத்தில் வாழ்ந்து வரும் தங்கப் பொண்ணு பாட்டி (ரோகிணி) ஒரு நாள் காணாமல் போகிறார். அவரை கண்டுபிடித்துத் தரக் கோரி, அவரின் நான்கு மகள்களும் (தீபா, பூவிதா, ஜானகி, செம்மலர் அன்னம்), மகன் வழி பேரனும் (மண்டேலா முகேஷ்) காவல் நிலையத்திற்கு வருகிறார்கள்.
ஆறு மாதத்திற்கு முன்பு அங்கு மாறுதல் ஆகி, ஓய்வு நாளை நெருங்கிக்கொண்டிருக்கும் தலைமைக் காவலர் சுப்பிரமணியின் (பசுபதி) உதவியால் தங்கப் பொண்ணு கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். துரதிர்ஷ்டவசமாகச் சிறிது நேரத்தில் தங்கப் பொண்ணு இறந்துவிடுகிறார். அவரை நல்லடக்கம் செய்யும் வரை துணை நிற்பதாகத் தங்கப் பொண்ணுவின் பேரனுக்கு வாக்குறுதி அளிக்கிறார் சுப்பிரமணி. மொத்த காவல் நிலையத்தின் எச்சரிக்கையையும் மீறி, சடலத்துடன் கிடாரிபட்டிக்குச் செல்கிறார்.
அதைத் தொடர்ந்து, இழவு வீட்டில் இரவு நேரத்தில் தங்கப் பொண்ணுவின் காதுகளிலிருந்த தண்டட்டி திருடப்படுகிறது. இதனால் மொத்த இழவு வீடும் கலவர காடாகிறது. இந்தத் திருட்டு வழக்கைக் கையில் எடுக்கும் சுப்பிரமணி, விவகாரமான அந்தக் கிராமத்தைச் சமாளித்து தண்டட்டியையும் திருடனையும்/திருடியையும் கண்டுபிடித்தாரா, தண்டட்டிக்கும் தங்கப் பொண்ணுவிற்கும் உள்ள பிணைப்பு என்ன, தங்கப் பொண்ணு காணாமல் போகக் காரணம் என்ன போன்ற கேள்விகளுக்கு, ரகளையான ஒரு இழவு வீட்டைக் கதைக் களமாக்கி பதில் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ராம் சங்கையா.
கதையின் நாயகனாக பசுபதி தன் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார் என்றாலும், இன்னும் கூடுதலாக அவரை பயன்படுத்தியிருக்கலாம். கிராமத்து பெருசுகளுடனும் மூதாட்டிகளுடனும் மல்லுக்கட்டி அல்லல்படும் இடத்திலும், உருக்கமான இறுதிக்காட்சிகளிலும் தன் அனுபவ நடிப்பை உரமாக்கியிருக்கிறார். சிறிய பகுதிதான் என்றாலும், தங்கப் பொண்ணு கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார் ரோகிணி.
மகள்களாக வரும் தீபா, பூவிதா, ஜானகி, செம்மலர் அன்னம் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்கள். அதில், தீபா தன் மிகை நடிப்பால் சில இடங்களில் சிரிப்பையும் சில இடங்களில் சோதனையையும் தந்திருக்கிறார். குடிகார மகனாக வரும் விவேக் பிரசன்னா தன் உடல்மொழியால் ரகளை செய்திருக்கிறார். அம்மு அபிராமியும் ‘மண்டேலா’ முகேஷும் கதாபாத்திரத்தின் தன்மையறிந்து, தேவையான நடிப்பை வழங்கி, கவனிக்க வைக்கிறார்கள்.
மகேஷ் முத்துசாமியின் எளிமையான ஒளிப்பதிவும் சிவநந்தீஸ்வரனின் ஆர்ப்பாட்டமில்லாத படத்தொகுப்பும் படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறது. அதேநேரம், இரண்டாம் பாதியில் இன்னுமே காட்சிகளைக் குறைத்து சற்றே வேகம் கூட்டியிருக்கலாம். சுந்தர மூர்த்தி கே.எஸ்-இன் இசையில் எல்லா பாடல்களும் கதையோட்டத்தோடு தொந்தரவின்றி பயணிக்கின்றன. பட்டினத்தார் வரிகளில் வரும் ‘ஐயிரண்டு திங்கள்’ பாடலும், இயக்குநர் ராம் சங்கையா வரிகளில் வரும் ‘காக்கி பையன்’ பாடலும் கவனிக்க வைக்கின்றன. பின்கதையில் வரும் காதல் காட்சிகளையும் ரகளையான குடுமிபிடி சண்டைக் காட்சிகளையும் தன் பின்னணியிசையால் மெருகேற்றி இருக்கிறார் இசையமைப்பாளர். கிராமத்து இழவு வீட்டை எவ்வித மிகையுமின்றி கண்முன் காட்டிய விதத்தில் வீரமணி கணேசனின் கலை இயக்கம் பாராட்டுக்குரியது.
வெகுளியான தலைமைக் காவலர் பசுபதி, பணத்திற்காக மட்டுமே வாஞ்சையாக உறவாடும் தங்கப் பொண்ணுவின் சுயநலமான பிள்ளைகள், ரகளையான கிடாரிபட்டி மக்கள் என நிதானமாகப் பேசத் தொடங்குகிறது முதற்பாதி. எதார்த்தமான நகைச்சுவையால் கிடாரிபட்டி விவரிக்கப்படுவதால், எளிதிலேயே திரைக்குள் ஒன்றிவிட முடிகிறது. தண்டட்டி களவாடப்பட்டதிலிருந்து வேகமெடுக்கிறது திரைக்கதை. கிராமத்தில் உள்ள வித்தியாசமான கதாபாத்திரங்கள், இழவு வீட்டில் நடக்கும் ரகளையான சம்பவங்களை சிறுசிறு கதைகளாக விவரிப்பது சிரிக்கும்படியும் ரசிக்கும்படியும் இருக்கின்றன. முக்கியமாக, ஒப்பாரி பாட்டிகள் கொடுக்கும் அலப்பறை, இழவு வீட்டையும் திரையரங்கையும் கலகலப்பாக்குகிறது.

ஆனால், இரண்டாம் பாதியில் வரும் காமெடி காட்சிகள் சிறுக சிறுக தன் எதார்த்த தன்மையை இழந்து, ஓவர் டோஸ் ஆகிவிடுகின்றன. முக்கியமாக, முதற்பாதிக்கு சுவைகூட்டிய மகள்களின் சண்டைக் காட்சியும், ஒப்பாரி வைக்கும் மூதாட்டிகளின் அட்டூழியங்களும், இரண்டாம் பாதியிலும் எவ்வித புதுமையுமின்றி அப்படியே நீள்வது, திரைக்கதைக்குத் தொய்வைத் தருகிறது. மேலும், முதற்பாதியில் அறிமுகமாகும் சில கதாபாத்திரங்கள் இரண்டாம் பாதியில் காணாமல் போய்விடுகின்றன. இவை எல்லாவற்றையும் தாண்டி, நம்மைச் சிரிக்க வைப்பது, தேனி வட்டார வழக்கில் பொங்கும் நையாண்டியும் நக்கலும்தான். இந்த நையாண்டிக்குக் கிராம மக்களின் உடல்மொழியும் கைகொடுத்திருக்கிறது.
தங்கப் பொண்ணுவின் பின்கதை தொடக்கத்திலிருந்தே யூகிக்கும்படி இருந்தாலும், கதாபாத்திரங்களின் நடிப்பும், அக்காட்சிகளின் தொழில்நுட்ப ஆக்கமும் கைகொடுக்க, அழுத்தமாக நம் மனதில் பதிகின்றன. நம்பகத்தன்மை இல்லாமல் வைக்கப்பட்ட இறுதிக்காட்சியானது, லாஜிக் மீறல்களால் வலிந்து திணிக்கப்பட்டதைப் போன்ற உணர்வைத் தருகிறது. அதனால், மனதை உலுக்க வேண்டிய இறுதி நிமிடங்கள், நமக்குக் குழப்பத்தை மட்டும் தந்து கடந்து போய் விடுகின்றன.

ஓவர் டோஸான காமெடி காட்சிகளையும், இரண்டாம் பாதி திரைக்கதையில் உள்ள தொய்வையும், இறுதிக்காட்சியில் உள்ள லாஜிக் மீறல்களையும் களைந்திருந்தால், இந்தத் `தண்டட்டி’ இன்னும் கூடுதலாக தகதகத்திருக்கும்.