வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் மதிய விருந்து அளித்தனர். இன்றுடன் பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் நிறைவடைந்துள்ளது.
அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா சபை தலைமையக வளாகத்தில் நடந்த யோகா தின விழாவில் பங்கேற்றார். நேற்று வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் மற்றும் அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.
அமெரிக்க பயணம்: இரு நாட்டு தலைவர்களும் தனியாக ஆலோசனை நடத்தினர். பிறகு, இரு நாடுகளின் மூத்த அதிகாரிகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அமெரிக்க பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றார்.
இந்நிலையில், இன்று இந்திய மற்றும் அமெரிக்க தொழில் நிறுவன சி.இ.ஓக்கள் கூட்டம் வெள்ளை மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகிய இருவரும் இணைந்து பங்கேற்றனர். அதன் தொடர்ச்சியாக, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் பிரதமர் மோடிக்கு சிறப்பு மதிய விருந்து அளித்தனர்.
மோடிக்கு மதிய விருந்து: இதையடுத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு பாராட்டு தெரிவித்தார். “இரு நாடுகளின் மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் உங்கள் பங்களிப்பு அளப்பரியது” என கமலா ஹாரிஸை இந்திய பிரதமர் மோடி பாராட்டினார்.
இந்திய அமெரிக்க நட்புறவு மற்றும் இந்திய அமெரிக்க குடிமக்களின் அமைதி மற்றும் செழுமைக்கு புதிய அத்தியாத்தை பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார்.

“அமெரிக்காவில், நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இந்தியா உள்ளது. அமெரிக்க எழுத்தாளரான ஜும்பா லஹிரியின் நாவல்களை நாங்கள் இந்திய சமோசாவுடன் ரசிக்கிறோம். மிண்டி கலிங்கின் நகைச்சுவைகளைப் பார்த்து நாங்கள் சிரிக்கிறோம். கோச்செல்லாவில் தில்ஜித்தின் இசைக்கு நாங்கள் நடனமாடுகிறோம். யோகா செய்வதன் மூலம் எங்களை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்கிறோம்.” என்றார் ஆண்டனி பிளிங்கன்.
கமலா ஹாரிஸ்: அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறுகையில் “நான் அமெரிக்காஃபின் துணை ஜனாதிபதியாக உலகம் முழுவதும் பயணம் செய்தபோது, இந்தியாவின் உலகளாவிய தாக்கத்தை நான் பார்த்திருக்கிறேன். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் தென்கிழக்கு ஆசியாவில் உயிர்களைக் காப்பாற்றின. இந்தோ-பசிபிக் மூலம், சுதந்திரமான பிராந்தியத்தை மேம்படுத்த இந்தியா உதவுகிறது” என்றார்.
அமெரிக்காவில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் துணை அதிபராக பொறுப்பு வகித்து வரும் கமலா ஹாரிஸின் தந்தை ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர். தாய் ஷியாமலா கோபாலன் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் வெளியுறவு செயலர் பிளிங்கன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த இந்திய பிரதமர் மோடி, “உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 3 நாட்களில் , நான் பல கூட்டங்களில் பங்கேற்றேன். இந்த சந்திப்புகள் அனைத்திலும், ஒன்று பொதுவானது. இந்தியா மற்றும் அமெரிக்க மக்களுக்கு இடையே நட்பும் ஒத்துழைப்பும் மேலும் ஆழமடைய வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர்” எனத் தெரிவித்தார்.
அரசு முறை பயணம் நிறைவு: “உண்மையிலேயே இந்த நூற்றாண்டுக்கான மகத்தான ஆற்றலை நமது கூட்டாண்மை கொண்டுள்ளது. எங்கள் மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் உங்கள் பங்களிப்பு நம்ப முடியாதது. எதிர்காலத்திற்கான வளர்ச்சியில் நமது ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் நான் ஆர்வமாக உள்ளேன். இந்தியாவும் அமெரிக்காவும் புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் துறைகளில் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகின்றன” எனக் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்றுடன் அரசுமுறை பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு முன்னெப்போதையும் விட ஆழமானது மற்றும் விரிவானது என்பதை இந்திய பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு நரேந்திர மோடி எகிப்து செல்கிறார். எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசியின் அழைப்பின் பேரில் மோடி எகிப்து செல்கிறார். ஜூன் 24ஆம் தேதி எகிப்து தலைநகர் கெய்ரோ சென்றடையும் அவர், ஜூன் 25ஆம் தேதி வரை அங்கு தங்குகிறார்.