பெண்களுக்கு மட்டும் ஏன் Dress Code வெச்சிருக்கீங்க..? கனிமொழி எம்.பி. ஆவேசம்

கோவை:
பெண்களுக்கு மட்டும் Dress Code எனப்படும் ஆடைக்கட்டுப்பாட்டை வைத்திருப்பது ஏன்? என் திமுக எம்.பி. கனிமொழி ஆவேசமாக கேள்வியெழுப்பினார்.

“பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் மற்றும் அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள்” என்ற தலைப்பிலான கருத்தரங்கம் பெண்கள் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கனிமொழி உரையாற்றினார். அவர் பேசியதாவது:

நான் போகிற பல கல்லூரிகளில் இந்தக் கேள்வியை கேட்டிருக்கிறேன். ஏன் பெண்களுக்கு மட்டும் Dress Code வெச்சிருக்கீங்கன்னு கேட்பேன். இதனால் நிறைய கல்லூரி முதல்வர்கள் என்னிடம் சண்டைக்கு வருவாங்க. ஆனா எனக்கு உண்மையிலேயே புரியல. ஒரு பெண்ணுக்கு என்ன நடந்தாலும் அதற்கு அவள் தான் பொறுப்பு என்பதை நீங்கள் ஏன் திணிக்கிறீர்கள். ஒரு பெண்ணுக்கு தான் என்ன உடை உடுத்த வேண்டும்.. என்னவாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை இருக்கிறது.

அதை பார்க்கிறவர்கள் தான் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். அவள் என்ன உடை உடுத்திருந்தாலும் அவளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஒரு பெண்ணை எடைபோடும் உரிமை இங்கு யாருக்கும் கிடையாது. வாழ்க்கையே ஒரு அனுபவம்தான். அதில் தவறுகள் இருக்கத்தான் செய்யும். நாம் சரியென்று நினைத்து செய்யும் விஷயங்கள் நாளை தவறாக மாறலாம். இன்று நம்பிக்கைக்குரியவர் என நினைத்து நாம் பழகும் நபர்கள், நாளை வேறு மாதிரியாக மாறிவிடலாம். இந்த மாதிரி விஷயங்கள் நடைபெறும் போது, இதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் செய்யும் எந்த விஷயத்துக்காகவும் வெட்கப்பட வேண்டியதில்லை.

முக்கியமாக உங்கள் உடல். உங்கள் உடல் என்பது நீங்கள் வெட்கப்பட வேண்டிய விஷயம் கிடையாது. இது உலக இயற்கை. எனவே, யாராவது உங்கள் உடலை வைத்து மிரட்டினால் தயவுசெய்து நீங்கள் ஓடி ஒளியாதீர்கள். ஏதோ வாழ்க்கையே முடிந்துவிட்டது போல தவறான முடிவையும் எடுக்காதீர்கள். தைரியமாக எதிர்கொள்ளுங்கள். காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள்.

இந்த நேரத்தில் போலீஸாருக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். தயவுசெய்து உங்களிடம் புகார் அளிக்க வரும் பெண்கள் மீது பழிபோடாதீர்கள். நீ ஏன் அப்படி செய்தாய், நீ ஏன் அங்கே போனாய் என தயவுசெய்து கேட்காதீர்கள். அவர்கள் அளிக்கும் புகார் மீது உடனே நடவடிக்கை எடுங்கள். இவ்வாறு கனிமொழி பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.