பாட்னா: இன்று பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது லாலு பிரசாத் ராகுல் காந்தியிடம் சொன்ன விஷயம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவருமான நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.
பாஜகவை எதிர்க்கும் கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான், ஹேமந்த் சோரன், சரத்பவார், லாலு பிரசாத், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே, உமர் அப்துல்லா , சீதாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
சுமார் 2 மணி நேரம் இந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் நீண்ட நாட்களுக்குப் பிறகு முக்கியமான அரசியல் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இது அங்கு கூடியிருந்த எதிர்கக்ட்சித் தலைவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார், மேலும் மக்களவையில் அதானி தொடர்பான விவகாரங்களில் மிகச் சிறப்பாகப் பேசினார் என ராகுல் காந்தியைப் பாராட்டினார் லாலு பிரசாத் யாதவ்.
மேலும், ராகுல் காந்தியை நோக்கி, “தாடியை ஷேவ் செய்துவிட்டு திருமணம் செய்துகொள்ளுங்கள், உங்கள் திருமண ஊர்வலத்தில் நாங்கள் பங்கேற்க விரும்புகிறோம், நீங்கள் முன்னரே திருமணம் செய்திருக்க வேண்டும், பரவாயில்லை இன்னும் நேரம் இருக்கிறது” என்றார்.
மேலும், “உங்கள் அம்மா சொல்வதை நீங்கள் கேட்கவில்லை என அவர் என்னிடம் சொன்னார். திருமணம் செய்துகொள்வேன் என இப்போது உறுதிப்படுத்துங்கள், நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்.” என விரலை உயர்த்தி விளையாட்டாக மிரட்டும் வகையில் பேசினார்.
லாலு பிரசாத்தின் இந்த பேச்சால் ராகுல் காந்தி வெட்கத்தில் நெளிந்தார். “நீங்க சொல்லிட்டீங்கள்ல.. செய்கிறேன்” என பதில் அளித்தார். மற்ற காங்கிரஸ் தலைவர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் லாலுவின் இந்த கிண்டல் பேச்சை ரசித்துச் சிரித்தனர்.
கடந்த ஜனவரி மாதம், ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையின் போது அளித்த பேட்டியில், சரியான பெண் கிடைக்கும்போது தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.