பாஸ்டன் : ‘டைட்டானிக்’ கப்பலின் சிதைந்து போன பாகங்களை பார்வையிடச் சென்று காணாமல் போன நீர்மூழ்கியில் பயணித்த ஐந்து கோடீஸ்வரர்கள் உயிரிழந்ததாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பிரிட்டனின் சவுத்ஹாம்டன் துறைமுகத்தில் இருந்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரை நோக்கி டைட்டானிக் சொகுசு கப்பல், 1912, ஏப்., 10ம் தேதி தன் முதல் பயணத்தை துவங்கியது.
திரைப்படம்
அதில், பணியாளர்கள், பயணியர் உட்பட 2,200 பேர் பயணம் செய்தனர்.
இந்த கப்பல், வடக்கு அட்லான்டிக் கடல் பகுதி யில் சென்று கொண்டிருந்த போது, பனிக்கட்டியில் மோதி இரண்டாக உடைந்தது.
இந்த விபத்தில், 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
உலக அளவில் மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம், பின்னாளில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.
இந்நிலையில், சிதைந்து போன டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக, ஐந்து பேர் அடங்கிய குழு, நீர்மூழ்கியில் சமீபத்தில் பயணித்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த, ‘ஓஷியன்கேட்’ என்ற நிறுவனம் இந்த சாகசப் பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், சாகச ஆர்வலருமான ஸ்டாக்டன் ரஷ், நீர்மூழ்கியின் பைலட்டாக அதை இயக்கி சென்றார்.
அவருடன், பிரிட்டனைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் ஹாமிஷ் ஹார்டிங், பாகிஸ்தானின் மிகப் பெரிய கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களான ஷாஸதா மற்றும் சுலைமான் தாவூத் என்ற தந்தை – மகன் மற்றும் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் கடற்படை அதிகாரியும், பலமுறை கடலுக்கு அடியில் சென்று டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை கண்டு வந்தவருமான பால் ஹென்ரி நார்கியோலே ஆகியோர் உடன் சென்றனர்.
வட அமெரிக்க நாடான கனடாவின் செயின்ட் ஜான்ஸ் என்ற இடத்தில் இருந்து, அட்லான்டிக் கடலில் 700 கி.மீ., துாரத்தில் அடியாழத்தில் சென்று கொண்டிந்தபோது, கடந்த 18ம் தேதி, அந்த நீர்மூழ்கி மாயமானதாக தகவல் வெளியானது.
வாய்ப்பில்லை
அமெரிக்கா மற்றும் கனடா கடலோர பாதுகாப்பு படையினர் கடந்த நான்கு நாட்களாக நீர்மூழ்கியை தேடி வந்தனர். இந்த நீர்மூழ்கி வெடித்து சிதறியிருக்கக் கூடும் என கூறப்படுகிறது.
மேலும், அதில் உள்ள ஆக்சிஜன் இருப்பு நான்கு நாட்களுக்கு மேல் காலியாகி இருக்கும் என்பதால், அதில் உள்ள பயணியர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், டைட்டானிக் சாகச பயணத்தில் ஈடுபட்ட ஐந்து பேரும் உயிரிழந்துவிட்டதாக, அமெரிக்க கடலோர பாதுகாப்பு படையினர் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்