புதுடில்லி, நாடு முழுதும் புதிய மின் கட்டண விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதன்படி, ‘பகல் நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு, வழக்கமான கட்டணத்தை விட, 10 – 20 சதவீதம் குறைவாக கட்டணம் வசூலிக்கப்படும்.
‘மின் தேவை அதிகமுள்ள இரவு நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு, 10 – 20 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படும்’ என, மத்திய மின் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மின் தேவை
வழக்கமாக இரவு நேரங்களில் தான் மின்சாரம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் அவற்றின் தேவை அதிகம் உள்ளது.
இரவு நேரங்களில் பொதுமக்கள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களின் மின் தேவையை பூர்த்தி செய்வது, மின் துறைக்கு பெரும் சவாலாக உள்ளது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், புதிய மின் கட்டண விதிமுறைகளை மத்திய மின் துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.
இதற்காக மின்சார -நுகர்வோர் உரிமை – விதிமுறைகளில் இரண்டு திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.
முதலாவதாக, ‘டைம் ஆப் தி டே டாரிப்’ எனப்படும், நேரத்திற்கு ஏற்ற கட்டண பட்டியல்; அடுத்ததாக, ‘ஸ்மார்ட் மீட்டர்’ விதிமுறைகளை எளிமையாக்குதல் என இரண்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது குறித்து, மத்திய மின் துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ராஜ்குமார் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
புதிய விதிமுறைகளின்படி, பகல் நேரத்தில் மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கான, வழக்கமான கட்டணத்தை விட, 10 – 20 சதவீதம் குறைவாக வசூலிக்கப்படும்.
இரவு நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு, வழக்கமான கட்டணத்தை விட, 10 – 20 சதவீதம் அதிகமாக வசூலிக்கப்படும்.
இந்த புதிய கட்டண விதிமுறை, தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும்.
விவசாய துறையினர் தவிர மற்ற அனைத்து நுகர்வோருக்கும், 2025 ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
இந்த புதிய விதிமுறைகளின் வாயிலாக, நுகர்வோர் இரவு நேரத்தில் வாஷிங் மிஷின் பயன்படுத்துவது போன்றவற்றை தவிர்த்து, தங்களுக்கான மின் கட்டணத்தை குறைக்க முடியும்.
இதன்படி, நாள் முழுதும் ஒரே மாதிரியான மின் கட்டணத்துக்கு பதிலாக, நேரத்துக்கு ஏற்ப மின் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
இது, நுகர்வோர் மற்றும் மின் வினியோகம் செய்யும் நிறுவனங்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.
கட்டண விபரம்
மின்சாரத்திற்கான தேவை குறைவாக இருக்கும்போது, மின்சாரத்தைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும் முயற்சியாக இந்த புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அடுத்ததாக ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை எளிமையாக்கும் நடவடிக்கை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதன் வாயிலாக, ஊழியர்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று மின்சார பயன்பாடு அளவு குறித்து கணக்கெடுக்க வேண்டிய தேவையிருக்காது.
ஸ்மார்ட் மீட்டரில் உள்ள மென்பொருள் வாயிலாக, மின் பயன்பாட்டை அந்த மீட்டர் தானாகவே கணக்கெடுத்து விடும். கட்டண விபரம் எஸ்.எம்.எஸ்., வாயிலாக நுகர்வோருக்கு அனுப்பப்படும்.
தினசரி எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறோம் என்பதையும், கட்டணம் எவ்வளவு என்பதையும் நுகர்வோர் மீட்டரிலேயே பார்க்க முடியும்.
இதில் தற்போதுள்ள வசதி குறைவு உள்ளிட்ட பிரச்னைகளை களைந்து, எளிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்