தன் காதல் கணவனைக் கொன்றவர்களைப் பழிவாங்க ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் சாமானிய பெண்ணின் கதையைப் பேசுகிறது `ரெஜினா’.
தாயை இழந்து வாழும் ரெஜினாவிற்கு (சுனைனா) தன் தந்தையே உலகமாக இருக்கிறது. சிறுவயது ரெஜினாவின் கண் முன்னையே அவரை ரவுடிகள் வெட்டிக் கொலை செய்கிறார்கள். அனாதையான ரெஜினாவின் வாழ்விலிருந்து மகிழ்ச்சி என்பது முற்றாக மறைகிறது. பல ஆண்டுகள் கழித்து தன் காதல் கணவர் ஜோவால் (ஆனந்த் நாக்), ரெஜினாவின் வாழ்க்கை அழகாகிறது. இந்நிலையில், ஜோ பணியாற்றும் வங்கியில் நடக்கும் கொள்ளை சம்பவத்தின் போது, கொள்ளையர்களால் அவர் கொல்லப்படுகிறார். மீண்டும் ரெஜினாவின் வாழ்வில் இருள் சூழ்கிறது.

தன் கணவனின் இறப்பிற்கு நீதி கேட்டுக் காவல் நிலையத்திற்கு நடையாய் நடக்கும் ரெஜினாவிற்கு, அவமானமும் ஏமாற்றமுமே மிஞ்சுகின்றன. ஒருகட்டத்தில் பொறுமையிழக்கும் ரெஜினா, தன் கணவனைக் கொன்றவர்களைக் கண்டுபிடித்துப் பழிவாங்கத் தனி ஆளாக ஆக்ஷன் அவதாரத்தில் களமிறங்குகிறார். இறுதியில், குற்றவாளிகளைக் கண்டுபிடித்துப் பழிவாங்கினாரா, ஜோ கொல்லப்படக் காரணம் என்ன, வங்கி கொள்ளைக்குப் பின்னால் உள்ள உண்மை என்ன போன்ற கேள்விகளுக்கான பதிலை, தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் பாணியில் திரைக்கதை அமைத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் டொமின் டிசில்வா.
ரெஜினா என்கிற மைய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் சுனைனா, தொடக்கத்தில் வரும் காதல் காட்சிகளில் மட்டும் கவனிக்க வைக்கிறார். ஆக்ஷன், வில்லனிஸம், காவல் நிலையத்தில் அவமானப்படும் காட்சிகள், வஞ்சம் செய்வது என அடுத்தடுத்து நாயகி பாத்திரம் விரியும் பொழுது, அதைச் சுமக்க முடியாமல் திணறியிருக்கிறார்.
பிரதான கதாபாத்திரங்களாக வரும் நிவாஸ் ஆதித்தனும், ரித்து மந்த்ராவும் கொஞ்சம் கவனிக்க வைக்கிறார்கள். இவர்கள் தவிர, ஆனந்த் நாக், விவேக் பிரசன்னா, பவா செல்லதுரை, கஜராஜ், தினா, அப்பானி ஷரத் என ஒரு டஜன் கதாபாத்திரங்கள் எவ்வித அழுத்தத்தையும் தராமல் வந்து போகின்றனர்.
பவி கே.பவனின் ஒளிப்பதிவு தொடக்கத்தில் திரைப்படத்திற்கான ‘மூட்’-ஐ செட் செய்ய மட்டுமே உதவியிருக்கிறது. பின்னர், இறுதி வரை நீளும் அந்த ‘மூட்’-க்கான ஒரே கலர் டோனும், டோபி ஜானின் படத்தொகுப்பும் கைகோத்து, மொத்த பட ஆக்கத்தையுமே குழப்பியிருக்கின்றன. சுரேஷ் நாயரின் இசையில், சித் ஶ்ரீராம் குரலில் ஒலிக்கும் ‘சூறாவளி போல’ என்கிற முதல் பாடல் மட்டும் முணுமுணுக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் மனதிலும் நிற்கவில்லை, திரைக்கதையிலும் ஒட்டவில்லை. மொத்த படத்திலிருந்தும் தனித்து நிற்கிறது பின்னணி இசை.

மாவோயிஸ்ட் தந்தை கொல்லப்படுவது, சுனைனா – ஆனந்த் நாக் காதல், வங்கிக் கொள்ளை, ஆனந்த் நாக்கின் கொலை, காவல் நிலைய சித்திரவதை எனத் துண்டு துண்டாகத் தொடங்கும் திரைக்கதை கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், சிறிது நேரத்திலேயே அது சாமானிய பெண்ணின் பழிவாங்கும் கதையாக மாறிவிடுகிறது. அதற்குப் பின் தறிகெட்டு ஓடும் திரைக்கதை, நம்மை ரொம்பவே சோதித்து ஒரு ‘ட்விஸ்ட்’-ஐ வைத்து இடைவேளையை அடைகிறது. ஆனால், அந்தத் திருப்பத்தையும் படம் தொடங்கிய அரை மணிநேரத்திலேயே யூகித்து விட்டதால், அது எந்த அதிர்ச்சியையும் தரவில்லை.
பிற்பகுதியில் வரும் திருப்பங்களுக்கான குறியீடுகளைப் படத்தின் தொடக்கத்திலேயே கொடுத்துவிட்டதால், இரண்டாம் பாதி முழுவதுமே எளிதில் யூகிக்கும் படியாகவே இருக்கிறது. முதற்பாதி திரைக்கதைக்கு ஏற்றார் போல, இரண்டாம் பாதி திரைக்கதைக்கான திருப்பங்களை அமைக்கத் தவறியிருக்கிறார் இயக்குநர்.
சுவாரஸ்யம், நம்பகத்தன்மை, காட்சிகளுக்கான கோர்வை என எதுவுமே கைகூடாததால், இரண்டாம் பாதி முழுவதுமே நமக்குச் சோதனை காலமாக மாறியிருக்கிறது. கதாநாயகி எடுக்கும் ஆக்ஷன் அவதாரமாவது கைகொடுத்து, காட்சிகளில் சுவாரஸ்யத்தைக் கூட்டுமா என்றால், அதிலும் ஏமாற்றமே. எந்த வில்லனும் வலுவாக இல்லை என்பதால், எல்லோரையும் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று நாயகி ‘டிஷ்கோல் டிஷ்கோல்’ செய்வதில் எவ்வித சுவாரஸ்யமும் இல்லை.

தொடக்கக் காட்சிகளைத் தவிர்த்து வேறெந்த காட்சிகளிலும் கதாநாயகி கதாபாத்திரத்தோடு ஒன்ற முடியவில்லை. இடையிடையே வரும் உருக்கமான காட்சிகளும் எந்தத் தாக்கத்தையும் தராமல் ஓடிவிடுகின்றன. படம் முழுவதும் ஆங்காங்கே பல கதாபாத்திரங்கள், காட்சிகள் திரைக்கதையின் ஓட்டத்திற்கு எந்த வகையிலும் உதவாமல் தனித்து நிற்கின்றன.
சாதா காட்சிகளில் கூட டஜன் கணக்கில் நிறைந்திருக்கும் லாஜிக் மீறல்களை அள்ள ஆறு கட்டப்பையாவது வேண்டும். இறுதிக்காட்சியில் ஒரே மூச்சாகத் திரையில் கொட்டப்பட்ட ட்விஸ்ட்டுகளில் எதிலுமே நம்பகத்தன்மை இல்லை என்பதோடு, யூகிக்கும்படியாகவும் அமைந்திருப்பது பெரிய மைனஸ்.
பழிவாங்கும் ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் நாயகி என்ற ஒன்லைன் தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல. ஆனால், திரைக்கதையும் அரதப்பழசு, யூகிக்கக்கூடிய ஒன்று என்பதால் `ரெஜினா’வின் சாகசமும் சோகமும் நம் மனதில் தங்கவில்லை.