மும்பை, சட்டவிரோத பங்கு வர்த்தகத்தில், மூன்று மாதங்களில், 4,672 கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்த, மும்பையைச் சேர்ந்த பங்கு வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பங்குச் சந்தை பரிவர்த்தனை செய்யும்போது, அதற்காக சில கட்டணங்கள், வரி செலுத்த வேண்டும். இவற்றை தவிர்க்கும் வகையில், ‘டப்பா டிரேடிங்’ எனப்படும் சட்டவிரோத பங்கு வர்த்தகத்தில் சிலர் ஈடுபடுகின்றனர்.
பங்குச் சந்தையின் விலையின் அடிப்படையில், பங்குச் சந்தைக்கு வெளியே தனியாக, இந்த பரிவர்த்தனை நடக்கும். இதில் பணப் பரிவர்த்தனையோ, பங்குகள் வாங்குவது – விற்பதோ நடக்காது.
இது ஒரு குறிப்பிட்ட பங்கின் விலை உயருமா அல்லது குறையுமா என்பது குறித்து நடக்கும் சூதாட்டமாகும். ஆனால், இதில் கிடைக்கும் லாபம் அல்லது நஷ்டம், ரொக்கமாக வழங்கப்படும்.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையின் காண்டிவல்லியைச் சேர்ந்த ஜதின் சுரேஷ்பாய் மேத்தா என்பவர், இந்த டப்பா டிரேடிங்கில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, அவருடைய வீட்டில் போலீசார், பங்குச் சந்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கடந்த மூன்று மாதங்களில், இவர், 4,672 கோடி ரூபாய் அளவுக்கு இந்த சட்டவிரோத பங்கு பரிவர்த்தனை செய்துள்ளார். இதனால், அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள், வரிகள் என, பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இவரை கைது செய்து, போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement