சென்னை: Vijay Sethupathi (விஜய் சேதுபதி) மலேசியாவில் தன்னை சந்தித்து கஷ்டத்தை கூறிய ரசிகைக்கு விஜய் சேதுபதி பெரிய உதவி செய்தார் என திரையுலகில் பேசப்படுகிறது.
கோலிவுட்டில் துணை கதாபாத்திரங்களில் நடித்து அதன் பிறகு ஹீரோவானவர் விஜய் சேதுபதி. புதுப்பேட்டை, நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களில் ஒரு சில காட்சிகளில் தலை காண்பித்த அவர், தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது நடிப்பு அனைவரையும் மிரள வைத்தது. இதனையடுத்து பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்தன.
தொட்டதெல்லாம் ஹிட்: தென்மேற்கு பருவக்காற்று மூலம் கவனம் ஈர்த்ததை அடுத்து அவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், பீட்சா, சூதுகவ்வும் படங்கள் வரிசையாக ஹிட்டடித்தன. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் வெளியாகி, அதில் விஜய் சேதுபதியின் நடிப்பும் வித்தியாசமாக இருந்ததால் முன்னணி ஹீரோக்கள் வரிசையில் நீண்ட போராட்டத்துக்கு பிறகு இணைந்தார்.
டெம்ப்ளேட்டை உடைத்த விஜய் சேதுபதி: நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற டெம்ப்ளேட்டுக்குள் சிக்காமல் அதை உடைத்து வில்லன் கதாபாத்திரத்திலும் கலக்க ஆரம்பித்தார். அந்தவகையில் அவர் பேட்ட, மாஸ்டர், விக்ரம் படங்களில் ஏற்றிருந்த நெகட்டிவ் கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் அவர் ஹீரோவாக நடிக்கும் படங்கல் சமீபகாலமாக பெரும் சொதப்பலாகவும், கடும் சோதனையாகவும் அவருக்கு அமைந்துவருகின்றன.
ஹிந்தியில் விஜய் சேதுபதி: இருப்பினும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத விஜய் சேதுபதி தொடர்ந்து கதைக்கு தேவை என்றால் எந்த கதாபாத்திரத்திலும் நடிப்பேன் எங்கும் நடிப்பேன் என்ற வகையில் ஹிந்தியில் வெளியான ஃபர்ஸி வெப் சீரிஸில் நடித்தார். அதேபோல் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் வில்லனாக நடித்துவருகிறார். அதுமட்டுமின்றி கத்ரீனா கைஃபுடன் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்திலும் நடித்திருக்கிறார்.
தமிழில் புதிய படம்: அவர் தற்போது தமிழில் ஆறுமுக குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார். படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. படத்தின் பூஜையும் அங்குதான் போடப்பட்டது. முதல் ஷெட்யூலை முடித்து இரண்டாவது ஷெட்யூலில் இருக்கிறது படக்குழு. அவர் படப்பிடிப்பில் மலேசியாவில் இருந்தபோது அவரை காண்பதற்கு ரசிகர்களும், ரசிகைகளும் ஷூட்டிங் ஸ்பாட்டில் குவிந்தனர்.
உதவிய விஜய் சேதுபதி: இந்நிலையில் தன்னை பார்க்க வந்த ரசிகை ஒருவருக்கு விஜய் சேதுபதி செய்திருக்கும் உதவி பெரும் பாராட்டை பெற்றுள்ளது. அதாவது மலேசியாவில் வீட்டு வேலை என்று சொல்லி ஒரு பெண் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். ஆனால் அந்தப் பெண்ணுக்கு அங்கு சரியான வேலை இல்லை எனவும், சில கொடுமைகளை அனுபவித்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி விசா காலமும் முடிந்துவிட்டதால் மீண்டும் செல்ல முடியாமல் தவித்திருக்கிறார்.
பணம் கட்டிய சேதுபதி: அந்தப் பெண் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து நடந்தவற்றை விஜய் சேதுபதியிடம் கூற, அவர் உடனே எதையுமே யோசிக்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தேவையான பணத்தை கட்டி அந்தப் பெண்ணை பத்திரமாக தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட தகவல் வெளியானதை அடுத்து விஜய் சேதுபதிக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர்.