புதுடெல்லி: கரோனா வைரஸ் சீனாவின் வூஹான் வைராலஜி ஆய்வகத்தில் உருவானதற்கான நேரடி ஆதாரம் எதுவும் கண்டறியப்படவில்லை என்று அமெரிக்க புலனாய்வுத்துறையின் அறிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் தேசியப் புலனாய்வு இயக்குநரக அலுவலகம் வெள்ளிக்கிழமை நான்கு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: மத்திய புலனாய்வு முகமை மற்றும் மற்றொரு நிறுவனத்தால் கோவிட் 19 தொற்று எங்கிருந்து பரவியது என்பதை இன்னும் தீர்மானிக்க முடியவில்லை. ஏனென்றால் இரண்டு (இயற்கை மற்றும் ஆய்வகம்) கருதுகோள்களும் குறிப்பிடத்தக்க அனுமானங்களைக் கொண்டிருக்கிறது அல்லது முரணான அறிக்கைகளினால் சிக்கல்களை எதிர்கொள்கின்றன.
வூஹான் ஆய்வகங்களில் கோவிட் வைரஸ் பற்றி விரிவான ஆய்வு வேலைகள் செய்யப்பட்டாலும், தொற்று அங்கிருந்து உருவானது என்பதற்கான எந்தவித ஆதாரத்தையும் அமெரிக்க புலனாய்வு நிறுவனம் கண்டறியவில்லை.
வூஹான் ஆய்வு மையத்தின் கோவிட் தொற்றுக்கு முந்தைய ஆய்வில், சார்ஸ் கோவிட் மற்றும் அதன் நெருங்கிய முன்னோடியின் தொடர்பு இருந்தற்கான ஆதாரம் எங்களிடம் இல்லை அல்லது கோவிட் தொற்றுக்கு முன்னர், வூஹான் ஆய்வு மையத்தின் ஊழியர்களிடம் அது தொடர்பான சம்பவம் குறித்து ஆய்வு நடந்ததற்கான நேரடி ஆதாரம் எதுவும் இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் 19 விவாதம்: கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் நகரத்தில் மனிதர்களுக்கு முதல் கரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, அதன் தோற்றம் குறித்த விவாதம் சூடுபிடித்தது. மார்ச் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கரோனா தொற்றின் தோற்றத்தை முடிந்தவரை வகைப்படுத்த வேண்டும் என்ற மசோதாவில் கையெழுத்திட்டார். அப்போது, கரோனா தொற்றின் தோற்றம் குறித்த தகவல்களை முடிந்தவரை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற அமெரிக்க காங்கிரிஸின் இலக்கை அவர் பகிர்ந்து கொண்டார்.
பிப்ரவரி மாதம் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் அதன் அறிக்கை ஒன்றில், கரோனா தொற்று சீனாவின் ஆய்வகங்களில் இருந்து பரவியிருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை ஒன்றில் மதிப்பிடப்பட்டுள்ளது என அந்நாட்டு எரிசக்தித் துறை தெரிவித்திருப்பதாக கூறியிருந்தது. இந்த அறிக்கை கரோனா தொற்றின் தோற்றம் குறித்த விவாத்துக்கு மேலும் வலுவூட்டியது. ஆனால் இந்த அறிக்கையை சீனா மறுத்திருந்தது.
எஃப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் வ்ரே பிப்ரவரி 28ல், கோவிட் தொற்றின் தோற்றம் சீனாவின் வூகானின் ஒரு ஆய்வக நிகழ்வு என்று தங்களது நிறுவனம் சில காலமாக மதிப்பிட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இந்த கூற்றில் உண்மையில்லை என்று சீனா மறுத்திருந்தது. மார்ச் 20 நிலவரப்படி, அமெரிக்காவின் மற்ற நான்கு நிறுவனங்களும் கோவிட் 19 தொற்று ஒரு இயற்கையான பரவல் என்று மதிப்பிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.