கோவை மாவட்ட திட்டக்குழுவுக்கு மாவட்ட ஊராட்சிகளில் இருந்து 5 உறுப்பினர்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சியில் இருந்து 13 உறுப்பினர்கள் என மொத்தம் 18 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதற்கான தேர்தல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

மொத்தம் 44 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில் இருந்து தகுதி வாய்ந்த 822 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
கோவை மாவட்ட ஊராட்சியில் மொத்தம் 17 கவுன்சிலர்கள் உள்ளனர். அதிமுகவினர் 7 , பாஜகவினர் 2, திமுக மற்றும் கூட்டணி கட்சியில் 8 கவுன்சிலர்கள் உள்ளனர். இந்தத் திட்டக்குழு தேர்தலில் போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த கோபால்சாமி அதிகபட்சமாக 15 ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.

அதிமுக மற்றும் பாஜகவின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 9 மட்டுமே. தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக அவருக்கு திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்களும் வாக்களித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதுகுறித்து கோபால்சாமி கூறுகையில், “எங்கள் கூட்டணிக்கு 9 வாக்குகள் தான் இருந்தன. இருப்பினும் என்னுடைய நட்பின் காரணமாக கட்சி வித்தியாசம் பார்க்காமல் திமுக, கொமதேக சேர்ந்தவர்களும் வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி.” என்று கூறியுள்ளார்.

அதேபோல மாவட்ட ஊராட்சியில் உள்ள மற்ற 4 இடங்களில் அதிமுகவைச் சேர்ந்த கந்சாமி, சக்திவேல், பிரதீப், திமுகவைச் சேர்ந்த ராஜன் ஆகியோர் வெற்றி பெற்றனர். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில் இருந்து 13 உறுப்பினர்களுக்கான இடங்களையும் திமுகவே கைப்பற்றியது.