தனக்கு தானே நெருப்பு வைத்துக்கொண்ட ரஷ்யா! புடினின் ராணுவத்தை பதம் பார்க்க படையெடுக்கும் கூலிப்படை

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு கடந்துள்ளது. இருப்பினும் போரில் எந்த பின்வாங்கலும் இல்லாமல் ரஷ்யா முன்னேறி வருகிறது. இந்நிலையில் இந்த போரில் ரஷ்யாவுக்கு உறுதுணையாக இருந்த அந்நாட்டின் ‘வாக்னர்’ கூலிப்படை, தற்போது ரஷ்யாவுக்கு எதிராக திரும்பியிருக்கிறது.

ஒரு காலத்தில் சோவியத் ரஷ்யாவின் ஒர பகுதியாக இருந்த உக்ரைன் உள்ளிட்ட நாடுகள், சோவியத் உடைந்த பின்னர் தனி நாடுகளாக அறிவித்துக்கொண்டன. தற்போது இந்த நாடுகளை தங்கள் வசம் கொண்டுவரும் வேலையை அமெரிக்கா ‘நேட்டோ’ அமைப்பு மூலம் முன்னெடுத்துள்ளது. எதிர் பார்த்தபடி பெரும்பாலான முன்னாள் சோவியத் நாடுகள் நேட்டோவில் இணைந்துவிட, உக்ரைனும் இதில் இணைவதாக கையெழுத்திட்டது.

இங்குதான் சர்ச்சை வெடித்தது. காரணம், உக்ரைன் நேட்டோவில் இணைந்துவிட்டால் நேட்டோ படைகள் உக்ரைன் எல்லையில் நிலைநிறுத்தப்படும். இது பக்கத்து நாடான ரஷ்யாவுக்கு நேரடி அச்சுறுத்தல். எனவே உக்ரைன் இதில் இணைய கூடாது என்று ரஷ்யா வலியுறுத்தியது. ரஷ்யாவின் பேச்சை கேட்காத உக்ரைன் இதில் இணைவதில் உறுதியாக இருப்பதாக அறிவித்தது. எனவே ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தது.

இந்த படையெடுப்பு நடந்து 16 மாதங்கள் ஆகியும் இன்னமும் போரின் வீரியம் குறையவில்லை. இதில் ரஷ்யாவுக்கு பக்கபலமாக இருப்பது வாக்னர் எனப்படும் கூலிப்படைதான். வெளிநாடுகள் இந்த தாக்குதலை போர் என்று கூறினாலும், ரஷ்யாவை பொறுத்த அளவில் இது வெறும் ராணுவ நடவடிக்கைதான். எனவே ரஷ்ய ராணுவத்தின் முக்கிய புள்ளிகள் இதில் களம் இறங்காமல், வாக்னர் போன்ற கூலிப்படைகளை கொண்டே ரஷ்யா உக்ரைனை கைப்பற்றி வருகிறது.

இந்த போரில் ரஷ்யாவுக்காக வாக்னர் குழு சுமார் 30 ஆயிரம் பேரை பலி கொடுத்திருக்கிறது. தற்போதைய சூழலில் உக்ரைனின் கணிசமான பகுதிகளை ரஷ்யா வசம் இருக்க வாக்னர் குழுதான் காரணம். இதை அந்த குழுவே பெருமையாக கூறி வருகிறது. ஆனால் இதை ரஷ்யா விரும்பவில்லை. இந்நிலையில் திடீரென வாக்னர் குழு மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.

எனவே தற்போது இந்த கூலிப்படை குழு ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக திரும்பியுள்ளது. வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின், ரஷ்ய அரசை கவிழ்ப்பதாக சபதமேற்றுள்ளார். இதனால் அந்நாட்டு அரசு சற்று பீதியடைந்துள்ளது. இதனையடுத்து எவ்ஜெனி பிரிகோஜின் மீது வழக்குப்பதிவும் செய்திருக்கிறது. இவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தெற்கு ரஷ்யாவின் ரோஸ்டோவ் பகுதியில் உள்ள தெற்கு பிராந்தியத்திற்கான ரஷ்ய இராணுவத் தலைமையகமான ரோஸ்டோவ்-ஆன்-டான்-ஐ வாக்னர் குழு கைப்பற்றியுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.

ஏற்கெனவே உக்ரைனுக்கு அமெரிக்க தொடங்கி ஐரோப்பிய நாடுகள் பல ஆயுத உதவிகள் செய்து வரும் நிலையில் அவற்றை சமாளிப்பதே ரஷ்யாவுக்கு பெரும் சவாலாக இருந்து வந்தது. தற்போது தங்கள் நாட்டின் கூலிப்படை தங்களுக்கு எதிராகவே திரும்பி இருப்பது ரஷ்யாவுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.