மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக வாக்னர் படை கிளர்ந்து எழுந்ததைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதின் வாக்னர் படையினரை துரோகிகள் என விமர்சித்தார். வாக்னர் படை தலைவர் பிரிகோஜின், வழியில் குறுக்கிடும் அனைத்தையும் துவம்சம் செய்வோம் என்றார். வார்த்தைப் போர், உள்நாட்டுப் போருக்கு வித்திட்ட நிலையில், இந்த மோதல் பெலாரஸ் அதிபரின் பேச்சுவார்த்தையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழுவை ரஷ்யா தனது கூலிப்படையாக பயன்படுத்தி வந்தது. வாக்னர் குழு ரஷ்ய சட்டத்திற்குக் கட்டுப்படாது என்பதால் பல வெளிநாட்டு மிஷன்களுக்கு ரஷ்யாவே இந்த வாக்னர் குழுவைப் பயன்படுத்தியுள்ளது. இப்போது நடந்து வரும் உக்ரைன் நாட்டுக்கு எதிரான போரில் கூட கடந்த ஓராண்டாக வாக்னர் குழுவுடன் இணைந்தே ரஷ்ய ராணுவம் சண்டையிட்டு வந்தது.
இந்நிலையில் தான் வாக்னர் குழு ரஷ்ய ராணுவத்திற்கு எதிராகவே திரும்பியுள்ளது. உக்ரைனில் டொனெட்ஸ்க் பகுதியில் உப்புச் சுரங்க நகரமான சோலேடரை ரஷ்யா கைப்பற்றியது. “இந்த நகரை நாங்களே கைப்பற்றினோம். வாக்னர் குழுவின் வெற்றியை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தட்டிப் பறிக்க நினைக்கிறது’ என வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் குற்றம்சாட்டினார்.
மேலும், வாக்னர் குழுவுக்கு போதுமான வெடிமருந்துகளை வழங்க ரஷ்ய ராணுவம் தவறிவிட்டது. ஒருகட்டத்தில் எங்களையே ரஷ்ய ராணுவம் தாக்கத் தொடங்கியது எனத் தெரிவித்த வாக்னர் குழு, உக்ரைனில் ஏற்பட்ட தோல்விகளுக்கு ரஷ்யாவின் ராணுவ உயர்மட்ட அதிகாரிகள்தான் காரணம் எனவும் குற்றம்சாட்டியது. இதன் காரணமாக ரஷ்ய அரசுக்கும் வாக்னர் குழுவினருக்கும் ஏற்பட்ட மோதல் முற்றி உள்நாட்டுப் போர் வெடிக்கும் அளவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.
வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின், ரஷ்யா ராணுவ தலைமையை கவிழ்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். நாங்கள் தொடர்ந்து முன்னேறி செல்கிறோம், இறுதிவரை செல்வோம். வழியில் குறுக்கிடும் எல்லாவற்றையும் எங்கள் படைகள் அழிக்கும். எங்கள் படைகளை ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதல்களால் குறிவைத்தது. அவர்களுக்கு பதிலடி கொடுப்போம்.” என கொந்தளித்தார்.
ரஷ்ய அதிபர் புதின், “நம் நாட்டின் ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்தும் அனைவரும் துரோகிகள். இத்தகைய நடவடிக்கை என்பது முதுகில் குத்துவது போன்ற செயல். நாட்டுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது என்பது தேசத்துரோக செயல். வாக்னர் குழு இத்தகைய செயல்பாட்டை நிறுத்த வேண்டும். யெவ்ஜெனி ப்ரிகோஸின் தனது தனிப்பட்ட லட்சியத்துக்காக ரஷ்யாவை காட்டி கொடுத்தார். இவர்கள் கடும் பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்” என எச்சரிக்கை விடுத்தார்.

இதற்கிடையே ரஷ்யாவின் உளவுத்துறை, ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ், யெவ்ஜெனி பிரிகோஜினுக்கு எதிராக கிரிமினல் வழக்கைப் பதிவு செய்தது. ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு அழைப்பு விடுப்பதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
ப்ரிகோஜின் தனது வாக்னர் படையுடன் ரஷ்யாவின் ரோஸ்டோவ் பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். ரஷ்யாவின் தெற்கு ராணுவ பிரிவின் தலைமையகம் இங்கே தான் உள்ளது. மேலும், சுமார் 10 லட்சம் பேர் இங்கே வசிக்கிறார்கள். இந்த பகுதியைத் தான் வாக்னர் குழு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.
தொடர்ந்து, ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவை நோக்கி வாக்னர் படை சென்றது. இதனால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மாஸ்கோ நகரை நோக்கி வாக்னர் படையினர் வருவதைத் தடுக்க, ரஷ்ய ராணுவம் சாலைகளைத் தகர்த்தது.
இதற்கிடையே தான் ரஷ்ய அதிபர் புதின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, வாக்னர் படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜினுடன் இடைக்கால உடன்படிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பிலும் விரும்பத்தகாத சேதங்கள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.
வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின், தனது போராளிகளுக்கு ரஷ்ய ராணுவம் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு, அதற்கு ஈடாக தனது கலகத்தை கைவிடுவதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். வாக்னர் படையினரின் நடமாட்டத்தை நிறுத்தவும் ஒப்புக்கொண்டார். தனது படையினரை திரும்பப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களாக ரஷ்யாவில் நிலவி வந்த பதற்றத்தைத் தொடர்ந்து, பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜினுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம், உள்நாட்டுப் போர் பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது.