தேவர் மகன் சர்ச்சை : உதயநிதி பட இயக்குனருக்கு கமல் கட்சியினர் மன்னிப்பு

நடிகரும், அமைச்சருமான உதயநிதி நடித்துள்ள, 'மாமன்னன்' படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக கமல் பங்கேற்றார். மாரி செல்வராஜ் பேசுகையில், 'தேவர் மகன் படம் எனக்கு வலியை தந்தது. அதில் நடிகர் வடிவேலு நடித்த இசக்கி கேரக்டர் தான், மாமன்னன் படத்தின் கதைக் களமாக அமைந்தது' என்றார்.

தன் படத்தை பற்றி கடுமையாக விமர்சித்த மாரி செல்வராஜிடம், எந்த ஒரு அதிருப்தியையும் கமல் வெளிப்படுத்தவில்லை. 'மாமன்னன்' படத்தை பிரயேத்கமாக பார்த்த கமல், மாரி செல்வராஜின் கையை பிடித்து பாராட்டினார்.

அதே நேரத்தில், உதவி இயக்குனராக இருந்தபோதே, 'தேவர் மகன்' படத்தை கடுமையாக விமர்சித்து, மாரி செல்வராஜ், கமலுக்கு கடிதம் எழுதியுள்ளார். 'ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் படம்' என விமர்சித்துள்ள அந்த கடிதம், இப்போது சமூக வலைதளங்களில் சூட்டை கிளப்பியுள்ளது. மாரி செல்வராஜுக்கு எதிராக, மக்கள் நீதி மய்யம் கட்சியினர், சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து, மய்யம் நிர்வாகிகள் கூறியதாவது: மனிதனை நிறத்தால் கூட பிரித்து பார்க்க தெரியாதவர் கமல். அவரா செயற்கையாக உருவாக்கப்பட்ட மதம், ஜாதி வைத்து பிரித்துப் பார்ப்பார்? மனிதநேயம் பேசப் பிறந்தவர். அவரை புரியாதவர்களை, அறியாதவர்களாக எண்ணி மாரி செல்வராஜை நாங்கள் மன்னிக்கிறோம். மாரி செல்வராஜ் எழுதியுள்ள கடிதத்தின் தொனி, படைப்பாளியும், நடிகருமான கமல் மீது நிகழ்த்தும் வன்மம்; கடும் கண்டனத்துக்குரியது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

'சாதகமான விளைவு!

எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளதாவது:மாரி செல்வராஜின் அமைதியின்மை என்பது, 'தேவர் மகன்' சினிமா உருவாக்கியது அல்ல. அந்த சினிமாவின் மனநிலையோ, பார்வையோ அவரை அமைதியிழக்க செய்யவில்லை. அது காட்டும் உண்மையான சமூகச் சூழல் தான், அந்த அமைதியின்மையை உருவாக்கியது. அது உண்மையை எடுத்து முன்னால் வைத்து, 'இதோ இது தான் நம் சமூக யதார்த்தம்' என, காட்டியது. தலித் மக்கள் நடுவே அந்த அமைதியின்மை உருவாக, முக்கியமான இன்னொரு காரணம், அப்போது உருவாகி வந்த தலித் அரசியல். அதன் வழியாக இளைய தலைமுறை வளர்ந்தது.அந்த அமைதியின்மையில் இருந்து மாரி செல்வராஜின் படங்கள் உருவாயின என, அவர் சொல்கிறார்.

அப்படியென்றால் அது, 'தேவர் மகன்' படத்தின் சாதகமான விளைவு தான். தேவர் மகன் காட்டும் உண்மைக்கு, தலித் தரப்பில் இருந்து எழ வேண்டிய எதிர்வினை மிகச்சரியாக அதுவே. அவ்வாறென்றால் மாரி செல்வராஜின் படங்கள், 'தேவர் மகன்' படத்தின் வெற்றி என்றே சொல்ல வேண்டும். 'படிங்கடா' என, தேவர் மகனின் சக்திவேல் எழுப்பிய குரல் தான், 'அசுரன்' படம் வரை மிக வலுவாக எதிரொலிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

– நமது நிருபர் –

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.