புதுடெல்லி: பகலில் குறைவு; இரவில் அதிகம் என்ற அடிப்படையில், மாறுபட்ட மின் கட்டணத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய மின் அமைச்சகம் கூறியிருப்பதாவது: நாட்டின் மின்சார விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மின் கட்டணத்தை பகல் நேரத்தில் 20 சதவீதம் வரை குறைக்கவும், இரவு நேரத்தில் 20 சதவீதம் வரை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வெவ்வேறு நேரங்களுக்கு மாறுபட்ட மின்சாரக் கட்டணத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், நுகர்வோர் தங்களது மின்சாரப் பயன்பாட்டை மாற்றியமைத்து, மின் கட்டணத்தை குறைத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மின் அமைச்சகம் இந்தப் புதிய கொள்கையை, வணிக மற்றும் தொழில் துறை நுகர்வோருக்கு 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. ஓராண்டுக்குப் பிறகு, விவசாயத் துறை நீங்கலாக, பெரும்பாலான மின் நுகர்வோர் இந்த புதிய மின்சாரக் கட்டணக் கொள்கையின் கீழ் வருவர்.
நுகர்வோர் தங்களது ஏசி இயந்திரத்தின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டே, இரவு நேரத்தில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது, மின் உற்பத்தி நிலையங்களின் சிரமத்தைக் குறைக்கும் என்பதுடன், இரவு நேர மின்வெட்டு அபாயத்தையும் கணிசமாகக் குறைக்கும்.
மேலும், கார்பன் உமிழ்வையும் கட்டுப்படுத்த உதவும் என்று மத்திய மின் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழக மின் நுகர்வோருக்கு பாதிப்பு இருக்காது: இது தொடர்பாக தமிழ்நாடு மின் வாரியம் அளித்துள்ள விளக்கம்: தமிழகத்தில் மின் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் அதிகாரம், தமிழக ஒழுங்குமுறை ஆணையத்திடம் உள்ளது.
தற்போதுள்ள மின் கட்டண முறையில், உச்சநேரப் பயன்பாட்டுக்கான கட்டணம், வீட்டு நுகர்வோருக்கு நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே, இந்த திருத்தத்தால் தமிழகத்தில் வீட்டு மின் நுகர்வோர் பாதிக்கப்பட மாட்டார்கள்.
மேலும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பிறகு, குறித்த காலத்துக்குள் மின் கட்டணத்தைச் செலுத்தாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், தற்போது தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நிறைவடையாததால், அபராதத் தொகை ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது. எனவே, மத்திய அரசின் மாறுபட்ட மின் கட்டண திருத்தங்களால், தமிழக மின் நுகர்வோர் பாதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்துள்ளது.