பண்ணிசையை இன்னிசையாய் தந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

ஏழு ஸ்வரங்களுக்குள் எண்ணிலடங்கா தேன்மதுர கீதங்களை அள்ளி தெளித்த மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் அவர்களின் 95வது பிறந்த தினம் இன்று…

கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள எலப்பள்ளி என்ற கிராமத்தில், சுப்ரமணியன் மற்றும் நாராயணி தம்பதியருக்கு மகனாகப் 1928, ஜூன் 24ல் பிறந்தார் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன்.

மூன்றரை வயதிலேயே தந்தையை இழந்த எம்எஸ் விஸ்வநாதன், தனது தாய்வழி தாத்தா கிருஷ்ணன் நாயர் அவர்களின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.

பணம் கொடுத்து இசைப் பள்ளியில் சேர வசதியில்லாத தருணத்தில், கண்ணனூரில் உள்ள நீலகண்ட பாகவதர் என்பவரிடம் இசை பயிலும் வாய்ப்பு கிடைத்து இசை பயின்றார்.

நான்காண்டு கால கர்நாடக இசை பயிற்சிக்குப் பின், சிறுவனாக இருந்த மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதனை, கண்ணனூரில் மூன்று மணி நேரம் இசைக் கச்சேரியும் செய்ய வைத்து அழகு பார்த்தார் நீலகண்ட பாகவதர்.

நடிப்பின் மீது ஆசையும் கொண்டிருந்த எம்எஸ் விஸ்வநாதனுக்கு, ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த “கண்ணகி” திரைப்படத்தில் பால கோவலனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து, பின் நடிக்க முடியாமல் போனது.

பின்னர் ஜுபிடர் பிக்சர்ஸ் அலுவலகத்திலேயே ஆபிஸ் பையனாக பணிபுரியத் தொடங்கி, அப்போது தயாரிப்பில் இருந்த “கண்ணகி”, “குபேர குசேலா”, “மஹாமாயா” ஆகிய படங்களுக்கு எஸ் வி வெங்கட்ராம அய்யர், வரதராஜுலு நாயுடு போன்ற இசையமைப்பாளர்கள் பணிபுரிவதை நேரடியாக பார்க்கும் வாய்ப்பினை பெற்றார் எம் எஸ் விஸ்வநாதன்.

ஜுபிடர் பிக்சர்ஸின் நிரந்தர இசையமைப்பாளரான எஸ்.எம் சுப்பையா நாயுடுவிடமும், இயைமைப்பாளர் சி.ஆர் சுப்பராமனிடமும் ஆர்மோனிஸ்டாகவும், உதவியாளராகவும் பணிபுரிந்து வந்தார் எம்எஸ் விஸ்வநாதன். இந்த காலகட்டங்களில்தான் இந்த இரட்டையர்களில் ஒருவரான டி கே ராமமூர்த்தியும் பணிபுரிந்து வந்தார்.

“தேவதாஸ்” திரைப்படம் நிறைவடையும் தருவாயில், அதன் இசையமைப்பாளரான சி.ஆர் சுப்பராமன் மரணமடைய, படத்தின் சில பாடல்கள் மற்றும் பின்னணி இசை சேர்ப்பு பணிகள், இந்த இரட்டையர்களின் கைக்கு வர, அதை சிறப்பாக செய்து, படத்தை வெற்றிப் படமாக்கினர் விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற இந்த இரட்டையர்.

ஹிந்தி திரையிசையின் ஆதிக்கம் அதிகம் இருந்த ஐம்பதுகளின் இறுதியில், விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற இந்த இரட்டையர்களின் வருகை ஒரு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது தமிழ் திரையுலகில்.

இயக்குநர் பீம்சிங்கின் 'பா' வரிசைப் படங்களான “பாசமலர்”, “பாலும் பழமும்”, “பாவமன்னிப்பு”, இயக்குநர் ஸ்ரீதரின் “நெஞ்சில் ஓர் ஆலயம்”, “நெஞ்சம் மறப்பதில்லை”, “காதலிக்க நேரமில்லை”, எம்ஜிஆரின் “பெரிய இடத்துப் பெண்”, “படகோட்டி”, “தெய்வத்தாய்”, “ஆயிரத்தில் ஒருவன்” என அன்றும் இன்றும் என்றும் அனைவராலும் ரசிக்கக் கூடிய காலத்தால் அழியா காவியப் பாடல்களை தந்து மெல்லிசை மன்னர்களாக விஸ்வரூபம் எடுத்தனர்.

முழுக்க முழுக்க கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த திரையிசையை, இசைஞானம் உள்ளவர்கள் மட்டுமே ரசிக்கும்படி இருந்த திரையிசையை, படித்தவன் முதல் பாமரன் வரை அனைவரும் ரசிக்கும்படியும், அதன் ராக லட்சணங்கள் மாறாமலும், திரையிசையை மெல்லிசையாக்கி தந்த மேதைதான் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன்.

இசை ஒன்றே உயிர் மூச்சாக கொண்டு வாழ்ந்த மெல்லிசை மன்னர், தனது நீண்ட திரையிசைப் பயணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஏறக்குறைய 700 படங்களுக்கும் அதிகமாக இசையமைத்து நம்மை மகிழ்வித்திருக்கின்றார்.

“தமிழக அரசு சினிமா விருது”, “கேரள அரசு சினிமா விருது”, “நந்தி விருது”, “கலைமாமணி விருது”, “கண்ணதாசன் விருது”, “கோல்டன் ரெமி விருது”, “பிலிம் பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது”, “கவுரவ டாக்டர் பட்டங்கள்” என ஏராளமான விருதுகளும், பட்டங்களும் அவரது வரவேற்பரையை அலங்கரித்திருந்தாலும், தென்னக திரையிசை ரசிகர்களின் மனங்களில் இன்றும் இனி என்றென்றும் மெல்லிசை மன்னராக உயர்ந்து நிற்பதே அவருக்கு கிடைத்த மிகப் பெரிய விருதாகும்.

புவியும் அசைந்தாட இசை வழங்கிய மெல்லிசை மன்னரின் தேனிசை, சேய் கேட்கும் விருந்தாகவும், நோய் தீர்க்கும் மருந்தாகவும் இருந்து, தமிழர்களின் வாழ்வியலில் கலந்துவிட்ட தவிர்க்க முடியா தனிப் பெரும் இசை என கூறி, அவரது பிறந்த தினமான இன்று அவருடைய நினைவுகளை பகிர்ந்தமைக்கு பெருமை கொள்வோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.