மாஸ்கோ: ரஷ்யாவின் கூலிப்படையான வாக்னர் குழுவின் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஜின், மாஸ்கோவை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த தனது படைகளை இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காகத் திரும்பி தங்கள் தளங்களுக்குத் திரும்ப உத்தரவிட்டார்.
ரஷ்ய ராணுவத்துக்காக பணியாற்றி வந்த தனியார் ராணுவப் படையான வாக்னர், ரஷ்ய ராணுவத்துக்கு எதிராகத் திரும்பியதால் ரஷ்யாவில் பதற்றம் ஏற்பட்டது. உக்ரைன் உடனான போரின் போது வாக்னர் படையினருக்கு எதிராகவே ரஷ்ய ராணுவம் செயல்பட்டதாக குற்றம்சாட்டி அப்படையினர் ரஷ்ய ராணுவத்தை அழித்தொழிப்போம் எனக் கிளர்ந்தனர்.
போர் பதற்றம்: இதையடுத்து, ரஷ்ய தலைநகர் மாஸ்கோ உட்பட பல்வேறு பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.ஆயுதப் போராட்டத்திற்குத் தூண்டுவதாக வாக்னர் தலைவர் பிரிகோஸினை கைதுசெய்ய உத்தரவிட்டது. ரஷ்ய அரசு, சட்ட விரோத நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அக்குழுவினருக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார்.
ஆனாலும், வாக்னர் குழுவினர் ரஷ்யாவின் முக்கிய நகரங்களை நோக்கி முன்னேறி வந்தனர். மாஸ்கோ நகரை வாக்னர் குழுவினர் நெருங்கி வந்தனர். இதனால், சாலைகளை தகர்த்து அவர்களை தடுக்கும் ஏற்பாடுகளைச் செய்தது ரஷ்யா. மேலும், வாக்னர் படையினருக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் மாஸ்கோவில் மக்கள் யாரும் கார்களில் வெளியே சுற்ற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
பேச்சுவார்த்தை: இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, வாக்னர் படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜினுடன் இடைக்கால உடன்படிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் வெளியிட்ட ஒரு ஆடியோ செய்தியில், இரத்தம் சிந்தப்படும் அபாயம் இருப்பதால் தங்கள் போராளிகள் தளத்திற்குத் திரும்புவார்கள் என்று கூறினார்.
ரத்தம் சிந்தும் நேரம்: “அவர்கள் வாக்னர் இராணுவப் படையை கலைக்க விரும்பினர். நாங்கள் ஜூன் 23 அன்று நீதிக்கான அணிவகுப்பை மேற்கொண்டோம். 24 மணி நேரத்தில் மாஸ்கோவிலிருந்து 125 மைல் தொலைவில் இருந்தோம். நாங்கள் எங்கள் போராளிகளின் இரத்தத்தில் ஒரு துளி கூட சிந்தவில்லை.
இப்போது, இரத்தம் சிந்தக்கூடிய தருணம் வந்துவிட்டது. ரஷ்ய இரத்தம் ஒரு பக்கம் சிந்தப்படும் என்ற பொறுப்பைப் புரிந்துகொண்டு, நாங்கள் எங்கள் படைகளைத் திருப்பி, திட்டமிட்டபடி கள முகாம்களுக்குச் செல்கிறோம்” என்று ப்ரிகோஜின் ஒரு ஆடியோ செய்தியில் கூறியுள்ளார்.
வாக்னர் படையினர் முற்றுகையிட்டிருந்த ரஷ்யாவின் தெற்கு பகுதியான ரோஸ்டோவ் பகுதியில் இருந்து வாக்னர் படையினர் வெளியேறி வருகின்றனர். வாக்னர் படையினர் “நாம் இங்கிருந்து வீட்டிற்கு செல்கிறோம்” என்று சொல்லி கைதட்டி கொண்டாடி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ தற்போது பரவி வருகிறது.

வழக்கு ரத்து, பதவி பறிப்பு?: பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்பாடுகளின்படி, வாக்னர் படை தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினுக்கு எதிரான ரஷ்ய பாதுகாப்புத்துறை பதிவு செய்த கிரிமினல் வழக்குகள் அனைத்தும், அந்நாட்டு அதிபர் புதினின் உத்தரவின் பேரில் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வாக்னர் படையினர் உடனான ஒப்பந்தப்படி ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு, இராணுவ தளபதி வலேரி ஜெராசிமோவ் ஆகியோர் உட்பட பாதுகாப்பு அமைச்சகத்தில் பலரை மாற்ற முடிவெடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வாக்னர் படை தலைவர் பிரிகோஜினின் கோரிக்கையை ஏற்று தனது அதிகாரிகளை புதின் மாற்றுவது, புதின் தோல்வியடைந்ததையே காட்டும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. முதுகில் குத்திய துரோகிகள் என வாக்னர் படையினரை புதின் கடுமையாக விமர்சித்த நிலையில், இப்போதைக்கு போர் சூழல் தவிர்க்கப்பட்டிருந்தாலும், இரு தரப்புக்கும் இடையே பகை தொடரக்கூடும் என்கிறார்கள்.