மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழு, ரஷ்ய ராணுவத்துக்கு எதிராகத் திரும்பி மாஸ்கோவை நோக்கி விரைந்து வரும் சூழலில், திங்கட்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் மாஸ்கோ நகர மேயர்.
ரஷ்ய ராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழு, ரஷ்ய ராணுவத்திற்கு எதிராகவே திரும்பியதால் அநாட்டில் பெரும் பதற்றம் உருவாகி உள்ளது. இதனால் ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் வெடிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.
ரஷ்யாவின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழுவை ரஷ்யா தனது கூலிப்படையாக பயன்படுத்தி வந்தது. வாக்னர் குழுவை இதற்கு முன்பு ரஷ்யா பல நேரங்களில் பயன்படுத்தியுள்ளது. சிரியா போர் உள்ளிட்ட பல நாடுகளில் ரஷ்யா இந்த வாக்னர் குழுவைப் பயன்படுத்தியுள்ளது.
வாக்னர் குழு ரஷ்ய சட்டத்திற்குக் கட்டுப்படாது என்பதால் பல வெளிநாட்டு மிஷன்களுக்கு ரஷ்யாவே இந்த வாக்னர் குழுவைப் பயன்படுத்தியுள்ளது. இப்போது நடந்து வரும் உக்ரைன் நாட்டுக்கு எதிரான போரில் கூட கடந்த ஓராண்டாக வாக்னர் குழுவுடன் இணைந்தே ரஷ்ய ராணுவம் சண்டையிட்டு வந்துள்ளது.
இந்தச் சூழலில் தான் ரஷ்ய ராணுவத்திற்கு எதிராகவே வாக்னர் குழு திரும்பியுள்ளது. முதலில் வாக்னர் குழுவினர் ரஷ்யாவில் எல்லையில் அமைந்துள்ள ரோஸ்டோவ் நகரை முற்றுகையிட்டனர். தொடர்ந்து மாஸ்கோ நகரை நோக்கி விரைந்து வருகின்றனர். இதற்கிடையே ரஷ்ய ராணுவம் இப்போது லிபெட்ஸ்க் நகருக்குள் நுழைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்கோ நகருக்கு வாக்னர் குழுவின் ராணுவப் படையை வராமல் இருக்க லிபெட்ஸ்க்- மாஸ்கோ நகரை இணைக்கும் சாலைகளை ரஷ்ய ராணுவமே தகர்த்துள்ளது. தற்போது மாஸ்கோ நகருக்கு 200 கி.மீ தொலைவில் வாக்னர் குழுவினர் வந்து கொண்டிருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில், மாஸ்கோ நகர மேயர் செர்ஜி சோபியானின், மாஸ்கோ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் யங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் தங்கள் கார்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் திங்கட்கிழமை மாஸ்கோ நகரில் யாரும் வெளியில் வர வேண்டாம் என்றும், அலுவலகங்கள் செயல்படாது என்றும் அறிவித்தார். அரசு பொது ஊழியர்கள் மற்றும் சில அத்தியாவசிய தொழில் நிறுவனங்களின் ஊழியர்களைத் தவிர, பெரும்பாலான மக்களுக்கு திங்கட்கிழமை விடுமுறை என்றும் அறிவித்தார்.
மேலும், அனைத்து முக்கிய நகர சேவைகளும் தயார்நிலையில் உள்ளதாக செர்ஜி சோபியானின் குறிப்பிட்டார். மேலும் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் உடனடியாக புகாரளிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.