ஒஹியோ : துப்பாக்கியை வைத்து விளையாடிக்கொண்டிருந்த, 2 வயது சிறுவன், தன் கர்ப்பிணி தாயை சுட்டுகொன்ற சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் உள்ள நகரம் நோர்வாக். இப்பகுதியை சேர்ந்த பெண் லாரா, 31. திருமணமாகி இப்பெண்ணுக்கு, 2 வயதில் ஒரு மகன் உள்ளான்.
எட்டு மாத கர்ப்பிணியான லாரா, சமீபத்தில், தன் மகனுடன் வீட்டில் இருந்தார். அப்போது சிறுவன் மேஜை டிராயரில் இருந்த தன் தந்தையின் கைத்துப்பாக்கியை எடுத்து விளையாடிக்கொண்டிருந்தான்.
அந்த துப்பாக்கியால் திடீரென தாயின் முதுகில் சுட்டுள்ளான். இதில் இருந்து பாய்ந்த குண்டு துளைத்து, அந்த பெண் மயங்கி விழுந்தார்.
காயமடைந்த நிலையிலும், அந்த பெண், போலீசுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து விரைந்து வந்த போலீசார், வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது ரத்தம் வடிந்த நிலையில் மயங்கி கிடந்த தாய் அருகே, அந்த சிறுவன் விளையாடியபடி இருந்தான். அருகே துப்பாக்கியும் கிடந்துள்ளது.
இதையடுத்து காயமடைந்து கிடந்த கர்ப்பிணியை மீட்ட போலீசார், மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில் அந்த பெண்ணும், வயிற்றில் இருந்த சிசுவும் பரிதாபமாக இறந்தனர்.
இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement