பெங்களூரு:கர்நாடகாவில் அரசு பஸ்களில், மகளிருக்கு இலவச பயணத்துக்கு அனுமதி அளிக்கும், ‘சக்தி’ திட்டத்தை தொடர்ந்து, மகளிருக்கு இலவச மதுபானம் வழங்க, ‘பப்’கள் எனப்படும் மதுபான விடுதிகள் முன் வந்துள்ளன.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், கொரோனா தொற்று பரவிய போது தொழிற்சாலைகள், நிறுவனங்கள், ஹோட்டல்கள் என, அனைத்தும் மாதக்கணக்கில் மூடப்பட்டிருந்தன.
மதுபானம் சப்ளை செய்யும் பப்களும் மூடப்பட்டிருந்ததால், இவற்றின் உரிமையாளர்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கினர்.
தொற்று கட்டுக்குள் வந்த பின்னரும் கூட, பப்களில் வாடிக்கையாளர் எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கவில்லை.
பெரும்பாலான பப்களில் மதுபானம் விற்பனையுடன், உணவும் கிடைக்கிறது.
ஊழியர்கள் விதவிதமான அசைவ உணவு வகைகளை தயாரித்து, வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஆனால், அவ்வளவாக கூட்டம் கூடவில்லை. குறிப்பாக, திங்கள் முதல், வியாழக்கிழமை வரை, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் இரவு நேரத்தில் மட்டும், ஓரளவு மக்கள் பப்களுக்கு வருகின்றனர்.
அதிலும், ஆண்கள் மட்டுமே அதிக அளவில் வருகின்றனர். பெண்கள் அதிகமாக வருவதில்லை.
எனவே, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், பெண்களுக்கு இலவச மதுபானம் வழங்க, சில பப் உரிமையாளர்கள் திட்டமிட்டுஉள்ளனர். பெங்களூரின் கோரமங்களாவில் உள்ள, பப் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:
கொரோனாவுக்கு பின், பப்களுக்கு வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைந்துள்ளது. நாங்கள் பெருமளவில் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். வாடிக்கையாளர்களை ஈர்க்க பல வழிகளை கையாள்கிறோம்.
பெங்களூரின் முக்கிய சாலைகளில், பப்கள் அதிகமாக உள்ளன. இந்த பப்களில் தினமும் விருந்துகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. வார இறுதியில் சிறப்பு விருந்துகள் நடக்கின்றன.
வார இறுதி விருந்து, சிறப்பு விருந்துகளில் பங்கேற்கும் பெண்களுக்கு, இலவசமாக மதுபானம் வினியோகிக்கிறோம். இதை பற்றி விளம்பரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இலவசமாக மதுபானம் வழங்குவதால், பப்களுக்கு அதிக அளவில் பெண்கள் வருவர்.
எங்களின் சேவையால் ஈர்க்கப்பட்டு, மற்ற நாட்களிலும் அவர்கள் பப்களுக்கு வருவர். இதன் வாயிலாக, எங்களது வருவாய் அதிகரிக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்